Wednesday, April 1, 2009

மீண்டும் அதே குறுகுறுப்பு, குதூகலம், ஆனந்த அதிர்ச்சி!

சிறு வயதில் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்? விளையாட்டு, குறும்பு, அழுகை, வெடிச் சிரிப்பு, டிவியில் ஒளியும் ஒலியும், கண்மணிப் பூங்கா நிகழ்ச்சிகள், அம்புலிமாமா புத்தகம்... இவற்றுள் நான் அதிகம் சிரித்தது, அதிகம் பயந்தது, அதிகம் சிலாகித்தது அம்புலிமாமா புத்தகத்துடன் தான். வண்ணமும் அல்லாமல், கறுப்பு வெள்ளையுமல்லாமல் ஈஸ்ட்மேன் வண்ணத்தினால் ஆன பக்கங்கள்.. மிகவும் பிடித்த விக்ரமாதித்தன், வேதாளம் கதைகள், தெனாலிராமன், பீர்பால், முனிவர்கள், ராட்ஸசர்கள், ஏழை விவசாயி, செல்வந்தன், பேராசைக்காரன் என எத்தனை கதாபாத்திரங்கள்...சிறுவயதில் இவர்களின் கதைகளூடே பயணிக்கும் போது ஏற்படும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை சமீபத்தில் மீண்டும் உணர்ந்தேன்.. அதே அம்புலிமாமாவால்

கால ஓட்டத்துக்கேற்ப அம்புலிமாமாவும் இணையத்துக்குள் வந்து விட்டது. கதைகளை ஹை-டெக் வடிவில் கொடுத்து ஜெடிக்ஸ் டிவி போல ஆக்கிவிட்டிருப்பார்கள் என்றெண்ணி அந்தத் தளத்திற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அறிவியல், பொது அறிவு, செய்திகள் என பல புதிய பகுதிகளை வைத்திருந்தாலும், பழைய... அதாவது 1947ம் ஆண்டிலிருந்து வெளியான அம்புலிமாமா கதைகளை அப்படியே, அதே படங்களுடன் தெளிவாக ஸ்கேன் செய்து அளித்திருக்கிறார்கள்.

விக்ரமாதித்தன், பீர்பால், தெனாலிராமன் கதைகளும் அப்படியே, அதே வடிவில்,அதே படங்களுடன்!நான் ரசித்தேன்.. நீங்களும் அம்புலிமாமாவின் குட்டி வயது வாசகர் எனில், மாயாஜாலக் கதை பிரியர் எனில்... http://tamil.chandamama.com/




பிடித்திருந்தால்...பயனுள்ள தகவல் எனில்... ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்!