Thursday, September 24, 2009

தோசைக்குள் மனசு!

ஹோட்டலுக்குள் நுழைந்ததும், ஓரமாக ஒரு டேபிளைத் தேடும் கூச்ச சுபாவம் நம் எல்லோரிடமும் உண்டு.. அது அஜயனுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் தான், காலியாக இருந்த பல டேபிள்களை கண்களாலேயே ஓரந்தள்ளி, ஓரத்தில் இருந்த டேபிளை மையம் கொண்டு அதில் அமர்ந்தான்...

"என்ன சார் வேணும்?"
அடுத்த ஷிஃப்டுக்கு வர வேண்டிய ஆள் லீவு போட்டதால் உருவான எரிச்சல், எச்சிலில் நீந்தி வார்த்தைகளாய் வெளியேறியது சப்ளையர் சரவணனுக்கு.

"பன்னீர் மசாலா தோசை எவ்ளோ?"

"35 ரூவா சார்!"

பாக்கெட்டைத் துழாவி, பணத்தை எண்ணினான் அஜயன். பணச் சுருக்கத்தை உணர்த்தியது அவனது புருவச் சுருக்கம்.
"பன்னீர் மசாலா வேணாம். மசாலா தோசை எவ்ளோ?"

'சரியான பரதேசி போலருக்கு. காச எண்ணி வச்சிகிட்டு சாப்புட வர்றான். இவனா டிப்ஸ் தரபோறான்...' என கம்ப்யூட்டரை விட வேகமாக மனதுக்குள் திட்டித் தீர்த்த சரவணன், கடுப்புடன், "30 ரூவா சார்!"

மீண்டும் பாக்கெட்டுக்குள் விரலால் கோலம் போட்ட அஜயன், நிம்மதிப் புன்னகையுடன், "சரி, கொண்டு வாங்க!" என்றான்.

10 நிமிடங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட தோசை, அடுத்த 5 நிமிடங்களில் அஜயனின் செரிமான மண்டலத்துக்குள் அவசரமாக பயணித்தது.

30 ரூபாய் பில்லை வைத்து விட்டு சரவணன் நகர, பாக்கெட்டிலிருந்து பணத்தை வைத்து விட்டு அஜயனும் வேகமாக நகர்ந்தான்.

அஜயனின் வேகத்தைப் பார்த்த சரவணன் "கிழிஞ்ச நோட்டு வச்சிருப்பானா...காசு கம்மியா வச்சிபுட்டு ஓடிட்டானா..." என மீண்டும் தன் கம்ப்யூட்டர் மனதுக்கு வேலை கொடுத்துக் கொண்டே, பில் பணத்தை எடுத்தான். அதில்....

35 ரூபாய் பணம் சரவணனை ஏளனம் செய்து கொண்டிருந்தது!

Thursday, September 17, 2009

தென்கச்சி சுவாமிநாதனின் மறுபக்கம்!

"தெளிப்பானை பூட்டிக் கொளனுடன் இணைத்து, பதம் பார்த்து பூச்சிக் கொல்லி திரவத்தை தெளிக்கவும்"
1988ம் ஆண்டுக்கு முன் வானொலியில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உதவிக்குறிப்பு இது.
"அண்ணாச்சி...அரை லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்த டப்பாவுல ஊத்தி, தெளிப்பானோட இணைச்சிட்டீங்கன்னா, ரொம்ப ஈஸியா தெளிச்சிடலாம். பூச்சி, புழு அண்டாது..." தென்கச்சி சுவாமிநாதன் என்ற பணியாளர் எளிமைப்படுத்தி அளித்த உதவிக் குறிப்பு இது.

பலத்த எதிர்ப்புக்கிடையே, போராடி வழக்குத் தமிழை வானொலிக்குள் புகுத்தி வெற்றி கண்டவர் இன்று நம்மிடையே இல்லை. அவரது இன்று ஒரு தகவலைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் அவர் இல்லத்துக்குச் சென்று நீண்ட நேரம் அளவளாவினேன். மன உளைச்சலில் இருப்பதாகக் கூறினார். இதுவரை ஊடகங்களின் பார்வைக்கு வராத அவரது அனுபவங்களை சிரிக்காமல் சொல்லி என்னை குலுங்கிச் சிரிக்க வைத்தார். அவர் கூற நான் குறித்துக் கொண்ட அவரது அனுபவங்கள், அவரைப் பற்றிய அரிய குறிப்புகள் இங்கே.. இது அவருக்கு அஞ்சலிப் பதிவு!!

பிடிக்காமல், வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி,"இன்று ஒரு தகவல்". வேறு வழியில்லாமல் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார் தென்கச்சியார். சிலர் சற்று பிரபலமானவுடனே புதுப் பேனா வாங்கி வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் போட ஆள் தேடுவார்கள். ஆனால் தென்கச்சியார் நேரெதிர். பிரபலத்தின் சாயல் சிறிதும் இல்லை அவரிடம்.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டவற்றில் சில துளிகள்:

"நான் அரசு ஊழியன். இந்த நிகழ்ச்சியை செய்வது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் செய்தென். அதே வேலையை இப்போ டிவியில செய்றேன். அவ்வளவு தான். என்னோட வேலையைச் செய்றதுக்கு என்னை ஏன் புகழ வேண்டும்?"

"நான் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகள்ல கொடுத்த நகைச்சுவைகளில் 75% திரைப்படங்கள்ல பயன்படுத்திக்கிட்டாங்க. பல இயக்குநர்கள் அனுமதி கேட்டாங்க. பலர் கேட்காமல் பயன்படுத்திக்கிட்டாங்க. குட்டிக் கதையெல்லாம் சொல்ற வரைக்கும் தான் அது என் படைப்பு. சொல்லி முடிச்சிட்டேன்னா, அது என்னோடதில்ல...கேக்கிறவங்களுக்கு சொந்தம்"

ஓய்வு பெறும் வரையிலும், அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. வெளிநாடு வாழ் தமிழர்களின் தொடர் அழைப்புகளை தட்ட முடியாமல், வேறு வழியின்றி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகள் சென்றுள்ளார்.

செய்தியாளராக இருந்த போது, பலமுறை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். பதட்டம் மிகுந்த பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களை பேட்டி எடுத்து, அவர்களது உள்ளக் குமுறல்களை தமிழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறார்.

எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர். மடிப்பாக்கத்தில் அவரது வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் 'தெருவலம்' சென்ற போது, வீட்டை விட்டு வெளியே வந்து 15 நிமிடங்கள் எனக்காகக் காத்திருந்தார். கிளம்பும் போது, "என்னை மார்க்கெட்ல இறக்கி விட்ருங்க தம்பி" என வாஞ்சையோடு கேட்டு வண்டியில் ஏறிக் கொண்டார்.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம்... TVS மொபெட்.

வீட்டின் மாடியில் அறை கட்டி வைத்துள்ளார். வெளியூரிலிருந்து அவரைப் பார்க்க வரும் நேயர்கள், ரசிகர்களை அங்கு தங்க வைத்து உபசரிப்பார்.

ஒரு முறை திருக்குறள் முனுசாமி அவர்கள், சுவாமிநாதனை அழைத்து "எங்கிருந்து தகவல்களை எடுக்குறீங்க? உங்க தகவல்களை என்னோட புத்தகங்களில் பயன்படுத்திக்கலாமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு தென்கச்சியார் "நான் சொல்ற நெறய தகவல்களை உங்க புத்தகத்துல இருந்து தான் எடுக்கறேன்" என்றார்.

இன்ஸ்டன்ட் காபி போல, ஒரு விஷயத்தைச் சொன்னால் சில நிமிடங்களில் அதை கருவாக வைத்து குட்டிக் கதை + ஒரு ஜோக் என கலந்து கட்டி கலக்குவார். 'மது' என்று நான் ஒரு வார்த்தையைச் சொல்லி, உடனே ஒரு 'இன்று ஒரு தகவல்' தயாரிக்க முடியுமா? என்றேன். "அப்பிடியா தம்பி.. ஒரு 5 நிமிஷம் வேற ஏதாவது பேசலாமா..." என்றவர், வேறு ஒரு விஷயத்தைப் பற்றி பேசினார். திடீரென நிறுத்தியவர், "நீங்க சொன்ன வார்த்தைக்கான குட்டிக் கதை தயார். சொல்லட்டுமா?" என்றார்.

தனது ஸ்டைலில் இன்று ஒரு தகவல் சொல்லத் துவங்கினார்.(அவர் ஸ்டைலில் படித்துப் பாருங்கள்).
ஒரு நாள் சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல ரெண்டு பேர் மூக்கு முட்ட குடிச்சுட்டு விழுந்து கிடந்தாங்க. கன்னியாகுமரி போற ரயில் வந்து நின்னுட்டுது. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் மட்டும் கொஞ்சம் கம்மியா குடிச்சிருப்பான் போல. அவன் மட்டும் தட்டுத் தடுமாறி ரயிலேறிட்டான். ரயிலும் புறப்பட்டு போய்ட்டுது.

ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி, ஸ்டேஷன்ல விழுந்து கிடந்தவன் மெல்ல எழுந்து பாத்தான். திடீர்னு அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுகையை கேட்டு அங்க வந்த ஸ்டேஷன் மாஸ்டர், "ஏம்பா, அழுவுற"ன்னு கேட்டார். அதுக்கு அவன் "சார், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் போய்டுச்சா?" ன்னு கேட்டான். அதுக்கு அவர், "போய்டுச்சேப்பா...நீ குடிச்சதுனால நிதானம் தவறி ரயில தவற விட்டுட்டே..பணமும் விரயம், நேரமும் விரயம். இதோட நாளைக்கு தான் அடுத்த ரயில். உன் கூட வந்தவன் குறைவா குடிச்சதால, தடுமாறி ரயிலேறிட்டான். குடிக்காம இருந்தா, ரெண்டு பேரும் போய்ருக்கலாம்ல. இனிமேலாவது திருந்து" அப்படீன்னார்.

"என்னது, என் கூட இருந்தவன் ரயிலேறி கன்னியாகுமரி போய்ட்டானா?" ன்னு கேட்டுட்டு மறுபடியும் அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சுட்டான். ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரொம்ப சங்கடமாயிட்டுது. "சரி விடுப்பா. இதுக்கு ஏன் அழற"ன்னு ஆறுதல் சொன்னார்.

அதுக்கு அவன் "அவன் என்னை வழியனுப்ப வந்தவன் சார். நான் தான் ஊருக்கு போகணும். அவன் கிட்ட பைசா கூட எதுவும் இல்ல"ன்னான்!

சிரிக்காமல் இதை சொல்லி முடித்தார் தென்கச்சியார்!

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார்.