Tuesday, October 27, 2009

காதல்


இரண்டு அழகான பட்டாம்பூச்சிகள் காதலித்தன. ஒருநாள் பூந்தோட்டத்தை வட்டமிட்டு மகிழ்ந்த போது...எப்போதும் பெண் பட்டாம்பூச்சியை சீண்டிப் பார்த்து விளையாடும் ஆண் பட்டாம்பூச்சி, " நமக்குள்ள ஒரு சின்ன விளையாட்டு. இதுல யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போமா?" என்றது.

"உனக்கு எப்பவுமே விளையாட்டு தான். சரி, என்ன விளையாட்டு?"

"நாளை அதிகாலையில் இந்த மொட்டு பூவாக மலர்ந்த உடனே, பூவுக்கு நடுவுல உட்காரணும். யார் முதல்ல இடம் பிடிக்கிறாங்களோ, அவங்களோட காதல் தான் உயர்ந்ததுன்னு அர்த்தம்! என்ன சொல்ற?"

"போட்டியில நான் தான் ஜெயிப்பேன். என்னோட காதல் தான் உயர்ந்தது!"

"ஆண்களோட காதல் தான் உயர்ந்தது. நாளைக்கு நீ அதை பார்க்கப் போற"

அடுத்த நாள் காலை, அந்தப் பூ மலர்வதற்கு முன்பே, ஆண் பட்டாம்பூச்சி அங்கு சென்று விட்டது. பூ மலரும் நேரத்தில் உடனே சென்று உட்காருவதற்குத் தயாராக சிறகுகளை விரித்து காத்திருந்தது. பூ மலரத் தொடங்கும் போது, "இன்னும் அவளைக் காணோமே...சே, இவ்வளவு தானா அவளோட காதல்?" என்ற எரிச்சலோடு பூவை நெருங்கியது.
மொட்டு மெல்ல விரிந்தது. உள்ளே... பெண் பட்டாம்பூச்சி. நள்ளிரவே மொட்டுக்குள் தன்னை வருத்தி புகுந்ததால் கிழிந்த சிறகுகளுடன், இறந்து திறந்த அதன் கண்களில் வலியையும் மீறி காதலையும், காதலனையும் வென்று விட்ட பரவசத்தின் மிச்சம்!!



கதை பிடித்திருந்தால், தமிழிஷ் பட்டையில் ஒரு ஓட்டைப் போடுங்கள்!!