Friday, June 5, 2009

அவன்..அவள்...'அது'

சென்னை புரசைவாக்கம். பகலில் இருந்த ஆர்ப்பாட்டங்கள், சலசலப்புகளின் சுவடுகள் ஏதுமின்றி அமைதியாய்..மணி: இரவு 10.30. டென்னிஸ் மேட்ச் பார்வையாளன் போல அங்குமிங்கும் கழுத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர். எந்தப் பக்கம் பார்த்தாலும் திருவல்லிக்கேணிக்கு பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஊரில் விவசாயம் பொய்த்துப் போனதால் நண்பனின் சிபாரிசோடு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பெரிய ஜவுளிக் கடையில் விற்பனையாளன் வேலை. ஒரு வாரம் தானாகிறது சென்னை வந்து. அழகழகான பெண்கள், மெரினா பீச், மவுன்ட் ரோடு என கனவுகளோடு வந்திறங்கியவனுக்கு, கடை தான் பகல் நேர உலகம் என விதிக்கப்பட்டு விட்டது.

மணி: 10.45.
"பரதேசிப் பய சரவணன் பஸ்ஸு நெறய இருக்குன்னு சொன்னானே...ஒரு ஈ காக்காயக் கூட காணோமே... அய்யய்யோ, ஒரு வார பேட்டா காசு ஐநூற புடுங்கிட்டு போய்ருவாய்ங்களா?" சுதாகரின் மெல்லிய புலம்பலை சில நொடிகள் கவனித்து விட்டு, தனது வேலையைத் தொடர்ந்தார் அருகிலிருக்கும் டீ கடையின் ஓனர்.
மணி: 11.00.
பஸ் வரும் என்ற நம்பிக்கை சுதாகரின் கால் வழியே வழிந்து ஓடி சாலையில் மறைந்தது. "இன்னைக்கு ரோட்டுல தான் படுக்கணுமா...ட்ரிப்ளிகேணிக்கு நடந்து கூட போக முடியாதே..." சுதாகர் புலம்பிக் கொண்டிருக்கும் போது தான், அவள் அங்கு வந்து சேர்ந்தாள். சுதாகரின் கண்களுக்கு சுமாராகத் தெரிந்த அவள், சாலையையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கத் தொடங்கினாள்.

மணி:11.10
சென்னையில் இரவு நேரங்களில் பெண்கள் வலை விரித்து காசு பிடிங்கி விடுவார்கள் என நண்பர்கள் அடித்த எச்சரிக்கை மணி, சுதாகரின் மண்டைக்குள் "ணங்" என ஓசை எழுப்பிய அதே நேரம், 24 ஆண்டுகள் அவனுக்குள் ஓயாமல் இயங்கி வரும் செரிமாண மண்டலத்துக்குள் திடீரென பட்டாம்பூச்சிகள் கூடி கும்மியடிக்கத் தொடங்கின."ஐநூறு ரூவா இருக்கே.. கொஞ்சம் செலவு செஞ்சாத்தான் என்ன....அதிகமா கேட்டாங்கன்னா? பேசித்தான் பாப்போமே...அடேய், ஊரு பேரு தெரியாத எடத்துல எக்கு தப்பா போய் மாட்டிக்க போறடா...." சுதாகருக்குள் சட்டசபை விவாதம் நடந்து கொண்டிருந்தது. இவர்கள் இருவரையும் கவனித்த நாயர், அந்தப் பெண்ணைப் பார்த்து லேசாக புன்னகையைச் சிந்தி, "பார்ட்டி நம்பகமானவன் தான், இங்க தான் எப்பவும் பஸ் ஏறுவான்" என பார்வையால் கிரீன் சிக்னல் கொடுத்தார்.

மணி:11.15
இதற்கு மேல் பஸ் வராது என உறுதி செய்து கொண்ட சுதாகர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முதல் தடவையா இருந்தா என்ன....போய் கேட்டுத்தான் பாப்போமே. ரேட் படிஞ்சா போகலாம்" என ஒரு வழியாக முடிவெடுத்துத் திரும்பும் போது....சற்று தள்ளி நின்றிருந்த பெண் இப்போது நெருக்கமாய்!
சுதாகர் திக்கித் திணறிக் கேட்பதற்குள்..."நைட்ல இப்போ தான் மொதோ மொதலா தொழிலுக்கு வந்துருக்கேன். அதான் நல்ல பார்ட்டியான்னு நின்னு பார்த்தேன்.. வீடு எங்கே?" அவளே பேச்சைத் தொடங்கினாள்.
"நா..நான் ட்ரிப்ளிகேணி""ஓ..போலாமா?"
"எவ்..எவ்வளவு? என் கிட்ட கம்மியாத் தான் இருக்கு"
"பரவால்ல வாங்க சார், அதிகமா கேக்க மாட்டேன். பெரிய கஸ்டமர் கிட்ட ரேட் அதிகமா வாங்கிக்குவேன்"
"சரி போலாம்.."
பக்கவாட்டில் மாட்டியிருந்த தனது யூனிபார்ம் சட்டையை மாட்டிக் கொண்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாள் அவள். சென்னையில் முதல் முறையாக ஆட்டோவில், அதுவும் பெண் ஓட்டும் ஆட்டோவில் பயணிக்கும் பரவசத்துடன் அவன்!
இருவரையும் சுமந்து கொண்டு சீறிப் பாய்ந்தது அது!!


கதை பிடித்திருந்தால் தமிழிஷ், தமிழ்மணத்தில் ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்

19 comments:

தினேஷ் said...

சீறி பாய்றிங்க போங்க ...

சென்ஷி said...

கலக்கல் :-)

பிரேம்குமார் அசோகன் said...

வருகைக்கு நன்றி சூரியன்

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி சென்ஷி

kishore said...

ஓட்டு போட்டாச்சு... கதை பிடிச்சிருக்குனு வேற தனியா சொல்லனுமா? ரொம்ம்ப நல்லா இருந்துச்சி... கொஞ்சம் ஜொள் ஒழுக வச்சிடிங்க பிரேம்

Anonymous said...

டிவிஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் எதிர்பாராத டிவிஸ்ட் இருந்த சூப்பர் டிவிஸ்ட். இந்த எழுத்து நடைய அப்படியே கன்டினியூ பண்ணுங்க பாஸு.

பிரேம்குமார் அசோகன் said...

ஓட்டுக்கும், கருத்துக்கும் நன்றி கிஷோர்

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி குளோபன்

Unknown said...

simply superb

ISR Selvakumar said...

கடைசி வரியில் திருப்பம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே சுவாரசியமான திருப்பம்.

சிராப்பள்ளி பாலா said...

இரட்டை அர்த்தத்தில் கதை இருந்தாலும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

Prem Ji,

Villangama Think pannringale?

Lone(?) u Know!!!

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி ராஜா

பிரேம்குமார் அசோகன் said...

திட்டுவீர்கள் என எதிர்பார்த்தேன் செல்வா சார்..

பிரேம்குமார் அசோகன் said...

என்னாலான சின்ன முயற்சி பாலா

Unknown said...

இது சுஜாதாவோட ரிக்ஷாகாரன் கதையோட சின்ன பிட்டு ரீமேக் போலவே!

ஷண்முகப்ரியன் said...

இறுதித் திருப்பம் சுவையாக இருந்தது,குமுதம் பாணியில்.

பிரேம்குமார் அசோகன் said...

கருத்துக்கு நன்றி ஷண்முகப்ரியன் சார்

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி நற்செய்தி! இது ரிக்ஷாக்காரன் ரீமேக் இல்லை. இரண்டு கதைகளுக்கும் ஒரே நடை, அவ்வளவே..கதையை வேறு பாதையில் பயணிக்கச் செய்து, எதிர்பார்க்காத முடிவைத் தரும் அந்த நடையில் ஒரு கதையை முயற்சித்தேன்.

Post a Comment