Sunday, July 26, 2009

ஆந்தைக்காக அலையும் சேட்டுகள்..சுடுகாடாய் மாறும் வண்டலூர்


மூட நம்பிக்கை = ஒருவர்/ஒரு குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, சில உயிர்கள் தங்கள் நிம்மதியை இழத்தல்.

வசதி குறைந்தோரின் மூட நம்பிக்கைகள் எலுமிச்சை, கோழி, அதிகபட்சம் ஆடு என்பதோடு முடிந்து விடுகிறது. வசதி படைத்தோரின் மூட நம்பிக்கைகள், எந்த எல்லைக்கும் செல்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், வட மாநிலத்தவர்கள். குறிப்பாக சேட்டுகள் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினர் (மொத்தமாக வட மாநிலத்தவர்களை நாம் ஏன் சேட்டுகள் என்று அழைக்கிறோம்?)
சமீபகாலமாக மிகப் பெரிய மூட நம்பிக்கை ஒன்று சென்னையில் வசிக்கும் வட மாநிலத்து பணக்காரர்களை வாட்டி எடுக்கிறது.தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் பன்மடங்கு பெருக வேண்டுமெனில், ஆந்தைகளின் உடலில் இருந்து முடியைப் பிடுங்கி (இறக்கையில் இருந்து பிடுங்கக் கூடாது. உடலில் இருந்து மட்டுமே பிடுங்கப்பட வேண்டும்), அதை வைத்து பூஜிக்க வேண்டும். ஏழு தலைமுறைக்கும் குறையாத சொத்துக்கள் கிடைக்க வேண்டுமெனில், ஆண் ஆந்தையின் கழுத்தைத் திருகி பூஜைகள் செய்ய வேண்டும்.
ஆடு, கோழிகள் என்றால் எளிதில் கிடைத்து விடும்.. ஆந்தைகள்? ஏற்கனேவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஆந்தைகளுக்கு எங்கே போவது, வனவிலங்கு காப்பங்களைத் தவிர...! பல மாநிலங்களிலும் வன விலங்கு சரணாலயங்களில் ஆந்தைகள் இந்த பூஜைக்காக ‘மோட்சம்’ அடைகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆந்தைகள் தங்கள் உயிரை இவர்களுக்காக தியாகம் செய்துள்ளன. எப்படி? ‘மேற்படி’ வருவாய்க்கு எந்த உத்திரவாதமும் இல்லாத அரசு ஊழியர்களைக் கொண்ட வண்டலூர் மிருகக் காட்சி சாலையில், ஆந்தைகள் புண்ணியத்தில் நல்ல வருவாய். ஒரு முடியைப் பிடுங்கித் தர 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர்.
இப்படியே ‘பிடுங்கிப் பிடுங்கி’ அங்கிருந்த மிகப் பெரிய அரிய வகை ஆந்தை தொடர்ந்து சாப்பிடாமல் செத்தே போனது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் ஆந்தைகள் உள்ளன. அவை நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், இருட்டில் வாழும் உயிரினங்கள் என்ற பெயரில் வெளிச்சம் இல்லாத அறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆந்தைகளின் அழிவு, வெளிச்சத்துக்கு வராமலேயே இருட்டுக்குள் மறைந்து விட்டது.

டெய்ல்பீஸ்: இந்த உண்மையை என்னிடம் ஒப்புக்கொண்டது, வண்டலூர் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு பணியாளர். அவர் என்னிடம் பேசியது:ஆந்தைங்கள வந்து சேட்டுங்கோ அடிக்கடி பாப்பாங்க சார்...முடி கேப்பாங்கோ, தர முடியாதுன்னு சொல்லி வெர்ட்டிடுவேன். ஆனா என்னால தொடர்ந்து அத்தையெல்லாம் காப்பாத்த முடில. பாவம் சார் ஆந்த. அத்த போட்டு கொடுமபட்த்தி கட்சில சாகட்சிடானுங்கோ. அது ஒரு வாயில்லா பிராணி சார். சே. இன்னா மன்சனுங்க சார்..அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு கிளம்பும்போது, ‘ சொத்து வச்சிகிறீங்களா சார்.. அது 100 மடங்கு பெர்சா ஆவணுமா சார்... என்கிட்ட கட்சியா ஒரு ஆந்த முடி இர்க்கு சார். சேட்டு பசங்களுக்கு 5 ஆயிரம். நீ நம்மாளு. 2 குடு சார் போதும். இன்னா சார் சொல்ற...?
இன்னாத்த சொல்றது???

8 comments:

ஐந்திணை said...

புலி, சிங்கம் முடிகள்தாம் அதிர்ஷ்டம்! அதுவும் ZOO or Circus ல வளர்வதாய் இருக்கக்கூடாது என ஏதும் ஜோசியக்காரன் மூலமாய் புரளியை கிளப்புவோமா?

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி ஐந்திணை... அதற்கும் ஒரு கூட்டம் புறப்படும்!

Unknown said...

"இருட்டில் வாழும் உயிரினங்கள் என்ற பெயரில் வெளிச்சம் இல்லாத அறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆந்தைகளின் அழிவு, வெளிச்சத்துக்கு வராமலேயே இருட்டுக்குள் மறைந்து விட்டது" - Super!

annanudan irundhu ithanai neril ketta satchi adiyen!

துளசி கோபால் said...

அடப்பாவிகளா(-:

ஏழேழுஜென்மத்துக்கும் சல்லிக்காசு இவுங்க கையிலே நிக்கக்கூடாதுன்னு சாபம்தான் விட முடியுது.

துபாய் ராஜா said...

//துளசி கோபால் said...
அடப்பாவிகளா(-:

ஏழேழுஜென்மத்துக்கும் சல்லிக்காசு இவுங்க கையிலே நிக்கக்கூடாதுன்னு சாபம்தான் விட முடியுது.//

துளசியம்மாவின் சாபம் பலிக்கட்டும்.

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி துளசி...

பிரேம்குமார் அசோகன் said...

சாபம் விடுவோம் சங்கம் ஆரம்பித்தால் நல்லா கல்லா கட்டலாம் போலிருக்கே துபாய் ராஜா.. நன்றி!

திங்கள் சத்யா said...
This comment has been removed by the author.

Post a Comment