தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திபள்ளி செக்போஸ்ட். இரு மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது மழை. மாரத்தான் ரேஸ் ஆடும் மழைக்கு இதமாக டீ குடித்துக் கொண்டிருந்தார் இமானுல்லா. 10 ஆண்டுகளாக இந்த செக்போஸ்ட்டில் தான் வேலை. வரும், போகும் வண்டிகளில் கடத்தல் பொருட்கள் இருப்பதை டிரைவர்களின் கண்களை வைத்தே கண்டுபிடிக்கும் நேர்மையான கில்லாடி போலீஸ்காரர். தீவிரவாத நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததால், இமானுல்லாவுக்கு அன்று டபுள் டியூட்டி.
உக்காந்த எடத்துலயே உலகம் பூரா ஹைடெக் பொருளாதார தீவிரவாத்தை அழகா பண்றான் அமெரிக்காகாரன். அந்த மாதிரி எதாவது பண்ணி தொலையக்கூடாதா இந்த தீவிரவாதிங்க.. இப்படி அவனுங்களும் ஓடி ஒளிஞ்சி, நம்மளையும் நிம்மதியா விடமாட்றானுங்க" புலம்பலை முனகலாக்கிக் கொண்டிருந்தார் இமானுல்லா.
தூரத்தில் மிக வேகமாக ஒரு பைக். லெதர் கோட், ஹெல்மெட் போட்டு முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு வருகிறான் ஒருவன். அவனை மடக்கினார். "சொல்லுங்க சார், எதுக்கு நிறுத்துனீங்க?"
"ம்ம்..உனக்கு மாலை போட்டு மரியாதை பண்ணத்தான். இறங்குய்யா வண்டிய விட்டு. சைடுல என்னய்யா அது?"
"மணல் பை சார். பாக்ஸிங் பிராக்டிஸ் பண்ண கொண்டு போறேன்"
"மணல் பை மாதிரி தெரியலயே.. அத பிரிச்சி கொட்டு"
"இல்ல சார்..அது வந்து..."
"இப்ப நீ பிரிக்கல...உன்ன நான் பிரிச்சிருவேன்"
பை முழுவதும் வெறும் மணல், வெறொன்றுமில்லை. ஆனால் அந்தப் பையில் ஏதோ ஒன்று கடத்தப்படுவதாக அவரது போலீஸ் மூளை சைரன் அடித்தது. ஆனாலும் அவருக்குத் தெரிந்த நுட்பங்களைக் கொண்டு சோதித்தார். முடியவில்லை. அரை மனதாக அவனை அனுப்பினார்.
ஒரு வாரம் கழிந்தது. அதே ஆள். ஆனால் இம்முறை பைக்கில் நான்கு பைகளைக் கட்டியிருந்தான். நான்கும் பெரிய, வித்தியாசமான வடிவத்தில் அழகாக இருந்தன.
"நிறுத்து, நிறுத்து.. போன வாரம் வந்தவன் தானே நீ...இந்த முறை என்ன கொண்டு போற? எல்லாத்தையும் பிரி"
இம்முறை மிகுந்த தயக்கத்துடன் பிரித்தான். பெரிய பைகள் முழுவதும் மிகச் சிறிய கூழாங்கற்கள், அதனுடன் சிறிய தர்மாக்கோல் பந்துகள். அவற்றை அக்குவேறு ஆணி வேறாக சோதித்து விட்டார் இமானுல்லா. கூட இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் சோதனையில் களைத்து விட்டனர்.
வெற்றிக் களிப்புடன் அத்தனை மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஆனாலும் அந்த மூட்டையில் என்னமோ இருப்பதாக இமானுல்லாவின் உள்மனது அலறியது.
"சே.. இத்தனை வருஷம் போலீஸா இருந்ததுக்கே வெக்கப்படுறேன். அவன் அந்தப் மூட்டைக்குள்ள என்னமோ கடத்துறான். ஆனா கண்டுபுடிக்க முடியல. விஞ்ஞானம் கடத்தலுக்கு நல்லாவே உதவுது" என வெளிப்படையாக புலம்பினார்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 8 முறை அவன் அந்த செக்போஸ்ட்டை அழகாக கடந்தான், பைக்கில் வித விதமான மணல், தெர்மாகோல், மரத்தூள் மூட்டைகளுடன். இமானுல்லாவும் சளைக்காமல் அவனை சோதனை செய்தார். ஒன்றும் நடக்கவில்லை.
மிகப் பெரிய ஏமாற்றத்துடன் பணி ஓய்வு பெற்றார் இமானுல்லா. எல்லைப் புற கிராமத்தில் உள்ள வீட்டில் பொழுதைக் கழித்த அவர், ஒருநாள் நெடுஞ்சாலையில் உள்ள கணேசன் டீ கடையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
"ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா...!" கணீரென ஒலித்த குரலைக் கேட்டு பேப்பரிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்த்தார் இமானுல்லா.
அதே முகம்...அதே குரல்...அவனே தான்!
"யோவ்... என்னய்யா இந்த பக்கம். எங்க கடத்தல் மூட்டைகளைக் காணோம்"
"வணக்கம் சார். ரிட்டயர்டு ஆயிட்டீங்களா...பரவால்ல, என்ன ஞாபகம் வச்சிருக்கீங்க!
இப்பல்லாம் யாரும் உங்கள மாதிரி நேர்மையா சோதனை பண்றதில்லை சார். காசு வாங்கிட்டு விட்டுர்றாங்க"
"எனக்கே தண்ணி காட்டுன கில்லாடிய்யா நீ, மறக்க முடியுமா...சரி, இப்போ எனக்கு ஒரு உண்மையைச் சொல்லு...மணல் மூட்டைங்கற பேர்ல தமிழ்நாட்டுல இருந்து கர்நாடகாவுக்கு என்னத்த கடத்துன? சத்தியமா நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!"
"வேணாம் விடுங்க சார்!"
"நான் ரிட்டயர்டு ஆயிட்டேன். உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ கடத்துறன்னு நிச்சயமா தெரியும். ப்ளீஸ், இத்தனை வருஷமா என்ன கடத்துன?"
"திருட்டு பைக்!"
எனக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வந்த ஆங்கிலத்தில் ஜோக். கதையாக்கி இருக்கிறேன்.
பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லையென்றாலும் பின்னூட்டமிடுங்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Super Sir.... very good creative story..
பழைய கதை.
எல்லாருக்கும் தெரிஞ்ச கதை
ஆனா எழுதியிருக்கிற விதத்துல நல்லா இருக்கற கதை.
The way u have presented it is awesome. Happy writing and keep rocking Prem.
Post a Comment