Thursday, January 29, 2009

வேலை தேடுவோர் ஜாக்கிரதை!

கடனை வாங்கி, அல்லல் பட்டு, வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பிள்ளைகளை படிக்கவைக்கும் பெற்றோரின் ஒரே கனவு...பிள்ளை நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பளம் வாங்குவான்(ள்) என்பது தான். இப்படி பிள்ளைகளின் படிப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களின் நோக்கமறிந்து, அவர்களின் ரத்தத்தை டொனேஷன் என்ற பெயரில் மொத்தமாக உறிஞ்சி எடுத்துவிடுகின்றன பள்ளி/கல்லுரிகள்... இதையெல்லாம் தாண்டி படித்து முடிக்கும் இளையர்களிடம் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நூதன முறையில் கொள்ளையடித்து, அப்பாவி பெற்றோரின் களைத்துப்போன மிச்ச சொச்ச ரத்தத்தையும் உறிஞ்ச புறப்பட்டுள்ளன, சில வேலைவாய்ப்பு கன்சல்டன்சி நிறுவனங்கள்.

கன்சல்டன்சி என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் செய்யும் மோசடிகளில் சில...வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளையர்களை வலைபோட்டு பிடிக்க சில கன்சல்டன்சி நிறுவனங்கள் கடைபிடிக்கும் முக்கியமான வழி... முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் கவர்ச்சி விளம்பரங்கள் அளிப்பது தான். தங்கள் நிறுவனத்திலேயே வேலை காலியாக இருப்பது போன்ற தோரணையில் அவர்கள் அளிக்கும் விளம்பரங்களை நம்பிச் செல்பவர்களிடம், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்கள் கொண்ட பட்டியலைக் காட்டி, ‘இவங்களெல்லாம் நம்ம கிளையன்ட்ஸ்.. உங்களுக்கு கண்டிப்பா வேலை இருக்கு. சோ..டெப்பாஸிட் கட்டிட்டு வேலைல சேந்துக்கலாம்’ என ஒப்புக்கு நடத்தப்படும் நேர்காணலின்போது மூளைச் சலவை செய்வர். எப்படியும் வேலைகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல 100 ரூபாய் முதல் சில ஆயிரங்களை பெற்றோரிடமிருந்து அல்லது கடனாக வாங்கிக் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டும்.

சில நாட்கள்...பல நாட்கள்... சில மாதம் என அந்த நிறுவனங்கள் காலம் கடத்துவர். அதன் பின் அந்த இளைஞருக்கு நிச்சயம் வேறு எங்காவது வேலை கிடைத்திருக்கும். அல்லது வெறுத்துப் போய் வேறு ஊருக்குப்போய் (பெரும்பாலும் பெங்களூர்) வேலை தேடுவார்... இதே போல பணம் செலுத்திய ஏராளமானோர் கடுப்பாகி வேறு முயற்சிகளில் கவனம் செலுத்தத் துவங்கி விடுவதால், பணம் வசூல் செய்த கன்சல்டன்சிகளுக்கு ‘கொள்ளை’ லாபம். பொத்தாம்பொதுவாக அனைத்து கன்சல்டன்சிகளையும் ‘தில்லாலங்கடிகள்’ என கூற முடியாது.

சிறிய அளவில் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் சென்டர்களை வைத்து போணி ஆகாமல் ஈ ஓட்டிக் கொண்டிருப்போர் இந்தப் பட்டியலில் உள்ளனர். இளைஞர்களின் வேலை வாய்ப்பு தாகத்துக்கு தண்ணீர் தருகிறேன் என அழைத்து திகட்டத் திகட்ட அல்வா கொடுத்துவரும் அந்த கன்சல்டன்சி நிறுவனங்கள், தங்களிடம் வேலை கேட்டு வருபவர்களிடம் ‘உங்களுக்கு இன்னும் திறமை பத்தல...கொஞ்சம் பயிற்சி கொடுத்து டெஸ்ட் வச்சி தேத்திடலாம்...அப்புறம் எம்.என்சி.,ல வேலை நிச்சயம்’ எனக் கூறி, பெரிய பட்டியலை நீட்டுவர்.

வேலைவாய்ப்புக்கான பதிவுக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் என பணத்தை அழுதுவிட்டு நிற்போர், எந்தெந்த நிறுவனங்களில் எங்களுக்கு வேலைவாங்கித் தரப்போகிறீர்கள் என கன்சல்டன்சியிடம் கேட்டுவிட்டால், அவ்வளவு தான்....‘இந்த பங்களா கட்ட ஏது இவ்ளோ காசு’ என்று ஒரு வார்டு கவுன்சிலரிடம் கேட்டால் அவரது கொந்தளிப்பு எப்படியிருக்கும்?! அதையே கொஞ்சம் நாகரீகமாக கன்சல்டன்சிகாரர்களிடம் காணலாம். ரூபாயை கட்டிவிட்டு, அவர்கள் முன் நின்று பவ்யமாக குட்மார்னிங் வைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இவர்களிடம் பணம் கொடுத்து வெறுத்துப்போய் வேறு வேலை தேடுவோர் எண்ணிக்கை ஏராளம்.. இதுபோலவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் பெருகிவரும் கன்சல்டன்சிகளை தடுத்து நிறுத்த முடியாது...நம் பணம் அவர்கள் பர்ஸுக்குள் செல்வதை வேண்டுமானால் தடுத்து நிறுத்தலாம்.. திறமை, தகுதி, படிப்பு இருந்தால் இது போல பணம் கொடுத்து பதிவு செய்யும் நிறுவனங்களிடம் சென்று சிக்கிவிடாமல், நேரடியாகவோ அல்லது நேர்மையாக செயல்படும் கன்சல்டன்சி அல்லது வலைமனைகளில் பதிவு செய்தோ வேலைவாய்ப்பு பெற முயற்சிக்கவும்!

No comments:

Post a Comment