Thursday, January 29, 2009

பஸ் கண்டக்டர்களுக்கு ஈவு, இரக்கம் இல்லையா?

என்னைக் கேட்டால் பேருந்துகளும், பள்ளிக்கூடங்களும் ஒன்றுதான் என்பேன். பள்ளிக்கூட வகுப்பறைகளில் பிள்ளைகளை அடக்குவது ஆசிரியர்..அவரைப் பிடிக்கவில்லை என்றாலும், உட்கார் என்றால் மாணவர்கள் உட்கார வேஎண்டும், நில் என்றால் நிற்க வேண்டும். பேருந்திலும் இதே கதை தான்...

"அய்யே அறிவில்ல, உள்ள ஏறுய்யா...ஏம்மா உள்ள நகந்து போனா குறைஞ்சி போய்டுவியா..படியில தொங்குற நாயே, அப்பிடியே விழுந்து செத்து போடா...இன்னாயா இது 100 ரூவா தர்ற, நா என்னா பேங்கா..." இது போல பயணிகளை மிரட்டிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் வேலையைப் பார்க்கும் கண்டக்டர்கள் யாராவது சிரித்து நீங்கள் பார்த்ததுண்டா?முதியோர்களானாலும் சரி...வழியில் கை காட்டினால் விசில் அடித்து நிறுத்த மாட்டார் கண்டக்டர்.. இதே போல, அவசரமாக இறங்க வேண்டும் என பயணிகள் கெஞ்சினாலும் நோ ரெஸ்பான்ஸ். ஏன்?


ஏன் கண்டக்டர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்?பயணிகளை ஆடு, மாடுகள் போல நடத்தும் கண்டக்டர்களுக்கு ஈவு, இரக்கமே கிடையாதா?இத்தனை கேள்விகளையும் சுமந்து சென்று, தெரிந்த கண்டக்டரிடம் (27D பேருந்தில் வேலை பார்க்கிறார்) கொட்டினேன். இவற்றுக்கு அவரளித்த பதில்கள், அவர் பாணியிலேயே...


"நல்லா கேட்ட போ..தமிழ் நாட்டுலயே குறைவா சம்பளம் வாங்குற கவுர்மெண்ட் ஸ்டாப் யாரு தெர்மா? நாங்க தான். அதுலயும் பாதி பேரு டெம்பபரி தான். பெரும்பாலும் எல்லா பஸ்லயும் ஆபிஸ் போறவங்க ரெகுலரா வருவாங்க. அவங்க கூட ஜாலியா பேசினாலோ, ஃப்ரெண்ட்லியா இருந்தாலோ, டிக்கெட் காசு நாளைக்கு தரேம்பாங்க.. இல்லன்னா அவங்களுக்கு தோதான இடத்துல வண்டிய நிறுத்த சொல்லுவாங்க...மத்த பாசஞ்ருங்க சும்மாவா இருப்பாங்க..சண்டைக்கு வர மாட்டாங்க?

எங்களுக்கும் புள்ள குட்டிங்க, அண்ணன் தம்பிங்க இருக்காங்கபா...எல்லாரும் படியில தொங்கும் போது எங்களுக்கு திக்கு திக்குனு இருக்கும்..ஆனா, மேல ஏறுங்கப்பா கண்ணுகளானு அன்பா அடக்கமா சொன்னா, எங்க தல மேல ஏறிடுவனுங்க.. அதட்டலா மேல ஏறச்சொன்னாலே எங்கள அசிங்க அசிங்கமா திட்டிட்டு கண்ணாடிகள உடைக்கிறானுங்க.,.. இதுல சாஃப்டா கேட்டா என்னாகும்..நீயே சொல்லுபா.எப்பவுமே அன்பா சொன்னா பாதிப்பேர் கேக்குறதில்ல..அதனால தான் போலீஸ்காரன் கூட அதட்டிகிட்டே இருக்கான்.
கொஞ்ச நேரம் பஸ்ஸுல வர்றவங்க உக்கார சீட் கிடைக்காம போனா சண்டை போட்டுகறாங்களே, ஏன்? கால் வலிக்கும், அடுத்தவன் வியர்வை நாத்தம் தாங்க முடியாது, மூச்சு திணறும். ஆனா நாங்க பஸ்ஸு ஸ்டார்ட் பண்ண நிமிஷத்துலருந்து, கடைசி ஸ்டாப்பிங் வரைக்கும், நசுங்கிக்கிட்டே அங்கயும் இங்கயும் நடக்கணும்.. அதே நேரம் எல்லாரையும் டிக்கெட் எடுக்க வைக்கணும்... பையில இருக்குற பணத்தை பாதுகாக்கணும்...டிக்கெட்ட ஒழுங்கா கொடுக்கணும், ஸ்டேஜ் கணக்கு எழுதணும்...பணத்தை எண்ணணும்...

இதெல்லாத்தையும் விட, அஞ்சு விரல்லயும் பணத்தை செருகி வச்சிக்கிட்டு, உள்ளங்கை முழுக்க டிக்கெட் கட்டுகளை பிடிச்சிகணும்...கையில ரத்த ஓட்டம் கம்மியாகி, நைட்டுல வலிக்கும்யா..இதெல்லாத்தையும் விட பெரிய அவஸ்தை...இயற்கை உபாதைகள்.. மத்த வேலை பாக்குறவங்களுக்கு 'அவசரம்'னா எப்படியாவது போய்க்குவாங்க.. ஆனா நாங்க பஸ்ஸ பாதி வழியில நிறுத்திட்டு இறங்கி போய்ட்டு வர முடியுமா? சொல்லுங்கய்யா..."என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை.. ஆயினும் வாதத்தை தொடர்ந்தேன். அவை அடுத்த பதிவில்.
பஸ், கண்டக்டர், டிக்கெட்

No comments:

Post a Comment