Thursday, January 29, 2009

சென்னை 'வெற்றுலா' பொருட்காட்சி!

ஐந்து நாள் லீவு விட்டதில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் போதுமான அளவுக்கு மேய்ந்து விட்டேன்.. இருந்தாலும் கடைசி நாளான ஞாயிறன்று ஒரு எட்டு போய்விட்டு வந்திடலாமே என மனது தயாராகும் வேளையில், சென்னை தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலா பொருட்காட்சிக்கு வரவேண்டும் என குடும்பத்தினரின் அன்பு மிரட்டலுக்கு கட்டுப்பட்டு (இல்லையென்றால் இரவு சோறு கிடையாது) சில வாண்டுகளுடன் கிளம்பினேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச்சிறந்த தவறான முடிவுகளில் இதுவும் ஒன்று என்பதை அங்கே உணர்ந்தேன்.


கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு (சென்னையில வண்டித் தொகை பெருகிப் போச்சோ..இதுக்கு தனியா ஒரு பதிவ போட்ற வேண்டியது தான்...) உள்ளே நுழைந்தோம். சென்னையின் மக்கள் தொகையில் பாதியை ஒரே இடத்தில் கண்டு விட்ட எரிச்சலுடன், மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து நகர்ந்தோம். ஷங்கர் இப்போது பாய்ஸ் படத்தை எடுத்துக்கொண்டிருந்தால், 'எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணுமடா' பாட்டை ரங்கநாதன் தெருவில் படம் பிடிக்காமல், சுற்றுலா பொருட்காட்சியில் எடுத்து, இளசுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கலாம்.


எடுத்ததும் "13ம் நம்பர் பேய் வீடு" அரங்கம்... வாண்டுகளின் அட்டகாசம் தாளாமல் வேறு வழியின்றி (பல ஆங்கிலப் படங்களின் திகில் + கோரப் படங்களை ஒட்டியிருந்ததால், சற்று பீதியுடன்) தலைக்கு 20 ரூபாய் கொடுத்து உள்ளே சென்றோம். இருபுறமும் கறுப்புத் துணியை போர்த்தி மேலே 0 வாட்ஸ் பல்புகளை எரியவிட்டு, பேய்கள் வாந்தியெடுக்கும் சத்தத்தை டேப் ரெக்கார்டரில் போட்டு விட்டிருந்தார்கள்.. முகத்தில் பேய் முகமூடியணிந்த சிறுவன் திடீரென குறுக்கே பாய்ந்து பயமுறுத்தினான்(?). அருகிலிருந்த வாண்டுகள் அலற, அந்த சிறுவனோ, "ண்ணா... 5 ரூவா குடுணா, டீ குடிக்கிறேன்" என கெஞ்சலாக கேட்டு என்னை உண்மையிலேயே பயமுறுத்தினான்.


தலைவலியுடன் வெளியே வந்தால், அடுத்தடுத்த 4 அரங்குகளில் "திகில் ராணியின் பயங்கரக் கோட்டை" "நடுக்காட்டில் அகோர மனிதனின் பயங்கரங்கள்" "பாதாள உலகில் திகில் மம்மியின் அட்காசங்கள்" என டப்பிங் பட தலைப்புகளை வைத்து அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தனர். இதில் அட்டகாசங்கள் என்பதற்கு, "அட்காசங்கள்" என தப்பும் தவறுமாக அச்சிட்டு, வாண்டுகளின் கேலிக்கு ஆளானார்கள். இதைக் கூட சகிக்கலாம். அரசு அரங்கங்களில் ஒட்டப்பட்ட அறிவிப்புகளில் கூட எழுத்துப் பிழைகள் (படங்கள் பார்க்கவும்). ஏன்? எப்படி...?


வாண்டுகளை பிடித்தபடி நடக்கும் போது கண்ணில் பட்ட "பழங்கால அதிசயங்கள்..அரிய நாணயங்கள், கலைப் பொருட்கள்" என்ற அரங்கத்திற்கு வலுக்கட்டாயமாக அவர்களை இழுத்துச் சென்றேன். இந்த அரங்கு பற்றிய சிறந்த கருத்துரை வழங்குவோர்க்கு பரிசுகள் வழங்குவதாக அறிவிப்பு ஒட்டியிருந்ததால் உற்சாகமாக உள்ளே நுழைந்த எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அதிர்ச்சி... பழங்கால ஆயுதங்கள், கம்பிகள், கற்கள், என பல பொருட்களை அடுக்கியிருந்தனர். ஆனால், ஒவ்வொன்றும் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது, அதன் வரலாறு என்ன என்பதை ஒரு வரி கூட எழுதி வைக்கவில்லை. சில பொருட்கள் மீது மட்டும், ஊறுகாய் ஜாடி, பருப்பு ஜாடி, உப்பு ஜாடி என ஒட்டியிருந்தனர். கூட வந்த பொடிசுகள் கேட்ட "இது என்ன?" கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், கருத்துரை புத்தகத்தையும் பரிசையும் தேடிக்கொண்டிருந்த வேளையில், "புக்குல பேஜி ஆய் போய்டுச்சி சார்.(புத்தகத்தில் பக்கம் தீர்ந்து விட்டது).. நாளிக்கு வாங்க" என்றார் அரங்கு நிர்வாகி.


விரக்தியிலும் கால் வலியிலும் கூட்டத்தில் ஊர்ந்து செல்லும் போது "ஸ்ரீ அமர்நாத் யாத்ரா பனிலிங்க தரிசனம்" என்ற மிகப் பிரம்மாண்ட செட்டப்பைக் கண்டபோது சிரிப்பதா, வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை. ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் இருக்கும் பனிலிங்கமே செயற்கை தான். இதில் ஊருக்கு ஊர் பனி லிங்க தரிசனம் என சூப்பராக கல்லா கட்டுகிறார்கள். 30 ரூபாய் டிக்கெட் என்றாலும் பக்த கூமுட்டைகள் (வேற என்னத்த சொல்றது) சாரை சாரையாக கன்னத்தில் போட்டுக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் கோலாகலக் காட்சியை நின்று காண முடியாமல் கூட்டம் என்னை நகர்த்திக் கொண்டு சென்றது.


இதன் பிறகு, மாநில அரசின் அனைத்து துறைகளுக்குமான அரங்குகள். ஒவ்வொரு அரங்கிலும்.....ஸ்ஸ்ஸ்... வேணாம் விடுங்க!!

1 comment:

vetrida puridal said...

super prem !! SAME BLOOD ENAKKUM NADADHURUCHIYYAAA...

Post a Comment