Tuesday, February 24, 2009

ஏ.ஆர். ரஹ்மான் தமிழர் இல்லையாம்; பாலிவுட்காரர்கள் கொக்கரிப்பு!!

Bollywood music director AR Rahman bags 2 Oscars"
- சி.என்.என், 9 எக்ஸ் மற்றும் பிற ஹிந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்.

"The renowned Bollywood Composor AR Rahman wins Oscar"
- ஹிந்தி மற்றும் ஆங்கில பத்திரிகைகள்.
"ஏ.ஆர். ரஹ்மான் சாதித்து விட்டார். இது நம் இந்தியாவுக்கும், பாலிவுட் உலகுக்கும் பெருமை." - சாருக்கான், சல்மான் கான் மற்றும் இதர கான்கள்.

"அவர் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஸ்டைல் அருமையாக இருக்கும். அவர் நம் சொத்து"
-அமிதாப் மற்றும் சில ஹிந்தி இயக்குநர்கள்.

எனக்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுண்டு. அதற்காக அம்மா தாலியைக் கழட்டி காதலிக்கு போட்டு அழகு பார்ப்பது போல, அவரை பாலிவுட் இசையமைப்பாளர் தான் என ஆமோதித்துக்கொண்டு கைதட்டும் பக்குவம் எனக்கில்லை. ரஹ்மான் தமிழன். தமிழகத்துக்கு சொந்தமானவர்.

"மதராஸி வாலா, ஓஹ் ச்சோர் சாலா" (மதராஸிகள் திருட்டு......) என இதுநாள்வரை நம்மை ஏளனம் செய்துவந்த மும்பை, டெல்லியர்கள் இப்போது ரஹ்மானை மட்டும் தூக்கி வைத்து சொந்தம் கொண்டாடக் காரணம்? இந்தியாவுக்கு கிடைத்த ஆஸ்கர், பாலிவுட்டுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். உலகம் பாலிவுட்டை போற்ற வேண்டும். இதை வைத்து ரஹ்மானை மிகப் பெரிய தொகைக்கு 'குத்தகை' எடுத்து (தங்கள் படங்களுக்கு), அதன் மூலம் உலகளவில் வியாபாரம் பண்ணலாம் என்ற வியாபார தந்திரம் தான்..

இதன் ஒரு பகுதியாக, ரஹ்மானுக்கு சஹாரா சிட்டியில் மிகப் பெரிய அரண்மனை வடிவிலான வீட்டை பரிசாகக் கொடுத்து, அங்கேயே மடக்கிப் போடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்கச் செய்தவர் இந்த 'இழுப்புக்கு' ஒத்துவரமாட்டார் என்றாலும்....அவர் நம் சொத்து. நம் சொந்தம். பசித்து சாப்பிடும் இலையில் முன்பின் அறியாதவன் கைவைத்தால் சும்மா விடுவோமா? உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே "ரஹ்மான் நார்த் இண்டியன் ஹை" எனக் கூற முயற்சிப்போரை என்ன செய்யப் போகிறோம்?





என் கருத்தை ஏற்றுக் கொண்டால் தமிலிஷ் மீது ஒரு ஓட்டு போட்டு விடுங்கள்!

Friday, February 20, 2009

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகத்தில் கரி!

அனைத்து டிவி சேனல்களும் நேற்று முண்டியடித்துக் கொண்டு ஒளிபரப்பிய உயர்நீதி மன்ற கலவரம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் பலர் அறியாத செய்தி...இந்த மோதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீதான காவல் துறையினரின் கொலைவெறித் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன், உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான ஒரு மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நடத்தினார்.
வக்கீல்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதால், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட தமிழகத்தின் முக்கிய நீதிமன்றங்களில் வழக்குகள் அப்படியே தேங்கி நிற்பதாகவும். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து வெறும் 7 நாட்கள் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் இயங்கியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சற்று உஷ்ணமாகி, நீதிமன்றம் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக செயல்படாமல் விடுமுறை அளிக்கப்படுவதை கடுமையாக கண்டித்தார். இனிமேல் எக்காரணம் கொண்டும் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுவது தடைபடக்கூடாது என ஆதங்கப்பட்ட அவர், நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸார் குவிக்கப்படுவதையும் கண்டித்தார். இவற்றுக்கு விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆனால் அந்த உத்தரவு உயர் நீதிமன்றத்துக்கு வந்து சேருமுன்னே, அவர் ஆதங்கப்பட்ட அத்தனை விஷ(ம)யங்களும் அறங்கேறியுள்ளன. நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதமேந்திய காவல் துறையினர் குவிப்பு..வக்கீல்கள், நீதிபதிக்கு அடி, உதை! இவற்றுக்கெல்லாம் மேலாக, உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை!!
கலவர இடத்தில் உண்மையில் நடந்தது என்ன? அடுத்த பதிவில்!
படம் நன்றி: தினத்தந்தி



பிடித்திருந்தால் ஒரு ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்!

Monday, February 2, 2009

ஹலோ மைடியர் ராங் நம்பர்...!!

தலைப்பை பாத்துட்டு ஏதோ, ரொமாண்டிக்கான கதை போல இருக்கும்ணு நெனச்சி அதே மூடுல படிச்சீங்கன்னா.. ஐ அம் சாரி! ஆர்வக் கோளாறால நான் ஆப்பு வாங்குன கதையைத் தான இப்போ பார்க்கப்போறீங்க.

10 வருஷங்களுக்கு முன்னாடி எனக்கே எனக்கான செல்போனை (செங்கல் வகையறா) அதிக விலை கொடுத்து வாங்குன நேரம் அது. கையில் செல்போன் இருந்ததால கண்ணு மண்ணு தெரியாம கடலை போட்டு, முழி பிதுங்கி பில்லு கட்டிக்கிட்டிருந்தேன் (ஒரு கட்டத்துல செல்போன வித்து பில்ல செட்டில பண்ணிருக்கேன்னா பாத்துக்கங்களேன்). ஆனாலும் கெத்து மெயின்டெய்ன் பண்ணணுமே....அதுக்காக மிஸ்டு கால் வந்தாக் கூட உடனே அவுட்கோயிங் கால்களை சகட்டு மேனிக்கு அடிச்சித் தள்ளி திரிஞ்ச காலம் அது.

ஒருநாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வண்டில போகும்போது, போன் ரிங் அடிக்குது. வண்டிய யாருக்கும் பாதகமில்லாம ஓரங்கட்டி (வண்டி கண்டிஷன் அப்பிடி) போன் எடுத்துப் பாக்குறதுக்குள்ள.....கால் கட்டாயிடுச்சி. வித்தியாசமா, நீளமா, புதுசா இருந்த நம்பரப் பாத்து கொஞ்சம் டர்ரியலானேன். ஒரு வேளை வேலைக்கு அப்ளை பண்ணுன கம்பெனியோட ஹெட் ஆபீஸ்ல இருந்து கால் பண்றாய்ங்களா? அய்யயோ அதிர்ஷ்டலட்சுமி ரிங்டோன் வழியா காட்டு கத்து கத்துனதுக்கு அப்புறமும் நாம எடுக்கலயா? இத விடக் கூடாதுன்னு உடனே போன எடுத்து அந்த நம்பருக்கு கால் அடிச்சேன்.

"ஹெல்லோ... ஐ காட் மிஸ்ட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்... ஆங்...வெல், மே ஐ நோ வூ இஸ் திஸ்..?"
எதிர்முனையில்: "அல்லோஓஓ.. யாரே.. ஒண்ணீயுமே புர்லியே. ஆரு வோணும்? ஒரு பெரிசு பேசியது.
நான் லைட்டா ஜர்க் ஆனேன். "ஆங்... எனக்கு இப்போ இந்த நம்பர்லருந்து கால் வந்தது. இது எந்த ஏரியா...யாரு கால் பண்ணுனது?"
"இது திர்ணாமல (திருவண்ணாமலை) சார்... ரங்கன் தான் இங்க இருந்தான். இர்ங்கோ அவுன கூப்புர்றேன்"
யாரது ரங்கன்? சரி கால் பண்ணியாச்சி... காத்திருந்து பேசித்தான் பாப்போமே...
சரியா 12 நிமிடங்கள் கழித்து, தகர டப்பாவுல ஆணியை வச்சி தேச்ச மாதிரி ஒரு குரல்
"ஆரு நீங்கோ...என்னா வோணும்?"
"நான் சென்னையில் இருந்து பேசறேன்..என்னோட நம்பர் 9840013929. எனக்கு கால் பண்ணீங்களா?
"ஒரு நிமிஷம் இருங்க சார்.."
10 நிமிடங்கள் கழித்து, " சார் தெர்ல சார், யாரோ ஒருத்தரு வந்தாரு.. போன் பண்ணிட்டு கெடைக்ககலைன்னு போய்ட்டாரு..."
"ஹ்ம்ம்.. இது என்ன இடம்?
"இது எஸ்டிடி பூத்து சார்"
"ஓக்கே....நான் வைக்கிறேன்"
"சார் சார்...ஒரு நிமிஷம் இருங்க. போன் பண்ணுன ஆளு வந்துட்டாரு, பேச சொல்றேன்...
"5 நிமிட மவுனம். "ஹேல்லோ"
"ஆங்... ஹல்லொ. நான் சென்னையில் இருந்து பேசுறேன். என்னோட நம்பர் 9840013929. எனக்கு நீங்க கால் பண்ணீங்களா?"
"ஓ.. சாரி சார், நான் தான் பண்ணுனேன். ஆனா நம்பர் தப்பா அழுத்தி உங்களுக்கு போய்டுச்சா... சாரி, ராங் நம்பர்!"

சரியாக 22 நிமிடங்களுக்குப் பின் அந்த காலை துண்டித்த ,பின் செல்போனை ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு வண்டி கண்ணாடியில் முகத்தை பார்த்தேன்....!!!



பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

புண் + தைலம் = முதல் காதல்!

காதல் ஜெயித்தவனுக்கு பூமாலை...தோத்தவனுக்கு காமாலை...! (ஒரு பொன்மாலைப் பொழுதில், வீட்டுல குப்புற படுத்துகிட்டு நான் யோசிச்ச கவிதை)

முதல் காதல் (அல்லது முதல் ஈர்ப்பு, அல்லது முதல் சைட்) என்பது ஒரு ஃபீலிங்...அதுல ஃபாலிங் ஆனா, கடைசியில ஃபூலிங் (கவித.. கவித...).
அஞ்சப்பர் செட்டிநாடு ஓட்டல்ல புகுந்து 500 ரூபாய்க்கு முழுங்கி, வயித்துல வனவிலங்கு சரணாலயத்த உருவாக்கிட்டு கை கழுவி பில்லுக்காக காத்திருக்கும் போது...பிரிண்டிங் மிஸ்டேக் காரணமா 50 ரூபாய்க்கு பில் வந்தா மனசு எப்படி கும்மியடிக்கும்?! அப்படியொரு குதூகலத்தைத் தான் முதல் காதல் ஏற்படுத்தும்.


நான் அப்போ ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன் (சென்னையில). எங்க ஒண்ணு விட்ட பக்கத்து வீட்டுல (ஒரு வீடு தள்ளி) 8வது படிக்கிற அழகான பொண்ணு இருந்தா. அவ பேரு அசின் (அந்தப் பொண்ணோட எதிர்காலம் கருதி பேர மாத்திருக்கேன்). ரெண்டு பேர் வீட்டுக்கும் நடுவுல இருக்குற வீட்டுல தான் நாங்க (நான், அசின், உப்பிலி, அவன் தம்பி லோகேஷ்) ஒண்ணா கூடி விளையாடுவோம். அவ வழக்கமா என் கூட தான் அதிக நேரம் கேரம் போர்டு விளையாடுவா.


ஒவ்வொரு முறை அந்த வீட்டுக்கு அவ வரும்போதெல்லாம் ஆமிர்கான்... அமிர்கான்னு என்னை அழகா கூப்பிடுவா (என்னோட எதிர்காலம் கருதி, என் பேரையும் மாத்திருக்கேன்). நானும், இன்ஸ்பெக்டர் கூப்பிட்டவுடனேயே ஓடுற ஏட்டய்யா மாதிரி பரபரன்னு ஓடி அவ முன்னாடி போய் நிப்பேன். இப்படியே கூத்தும் கும்மாளமுமா எங்களோட நாட்கள் ஓடுச்சி...


ஒரு நாள் வழக்கம் போல அவ என்னை கூப்பிட்டவுடனேயே நான் துள்ளி குதிச்சி ஓடும்போது, தெரியாம எங்க அப்பச்சி கால தட்டி விட்டுட்டேன். உடனே அவங்க "அட ந்தந்தானே...பொண்டாட்டி கூப்புட்டாப்புல இப்பிடி ஓடுறானே...இந்தப் புள்ளய கட்டுனா என்னைய கொலையா கொண்டுபுடுவான் போலருக்கே யாத்தீ" அப்படீன்னு கத்த... எனக்குள்ள ஒரு Na + O2 → Na2O (ரசாயன) மாற்றம்.


அந்த நிமிஷம் முதல், டிவி பெட்டிக்குள்ள பாட்டு ஓடும்போது என்னை ஹீரோவாகவும் அவளை ஹீரோயினாகவும் கற்பனை பண்ணிப் பாப்பேன். அவ வெளிய வந்து நிக்கும்போது, என்ன கலர் டிரஸ் போட்டுருக்கானு ஒளிஞ்சிருந்து கவனிச்சி... குடுகுடுன்னு ஓடிப்போய் அதே கலர் டிரஸ் மாட்டிட்டு அவ முன்னாடி நிப்பேன். எதுக்கு??? "சேம் பிஞ்ச்"னு சொல்லி என் கையை கிள்ளுவா பாருங்க....அதுக்கு!

இப்பிடியே போய்க்கிட்டிருந்தா என்ன அர்த்தம்னு ஒருநாள் என் காதலை(?) சொல்லத் துணிஞ்சிட்டேன். வீராவேசமா கிளம்புன என்னை, சுரேஷ் (பிரெண்டு) தடுத்து நிறுத்தினான். இப்பிடியெல்லாம் வெறுங்கைய வீசிகிட்டு போய் சொன்னா வேலைக்காவாதுண்ணு எனக்கு பயங்கர ஐடியா கொடுத்தான். கேட்டவுடனேயே கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டேன். ஆனா அவன் +2 படிக்கிறதாலும், பல பொண்ணுங்களுக்கு சைக்கிள் டிரைவர் வேலை பாக்குறதாலும் அவன் பேச்சை மதிச்சேன்.


அவன் சொன்ன ஐடியா: 1. என் ரத்தத்தாலே லவ் லெட்டெர் எழுதிக்கிட்டு அவகிட்ட கொடுக்கணும். 2. லெட்டெர் கொடுக்கும்போது, சிவாஜி அளவுக்கு இல்லைண்ணாலும் சரத்பாபு அளவுக்காவது கண்ணீர் விடணும்.
இந்த ஐடியாவை வேத வாக்காக நெனச்சிக்கிட்டு, வீட்டுக்கு போய் லெட்டெர் எழுதத் தயாரானேன்.


பிளேடை எடுத்து, கை மணிக்கட்டைக் கிழிச்சி...அய்யய்யோ, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுண்ணு முடிவு பண்ணினேன். காயமே இது பொய்யடாங்குற பழமொழி நினைவுக்கு வர, உடனே கையிலிருந்த விழுப்புண்ணைப் பார்த்தேன் (போன வாரம் ஓசியில டி.வி.எஸ் சாம்ப் வண்டி வாங்கி ரோட்டுல பிலிம் காட்டுனப்போ, பேலன்ஸ் மிஸ்ஸாகி லைட்டா குப்புற விழுந்ததுல பட்ட அடி). புண் கொஞ்சம் ஆறி, மேல கருப்பு கலர்ல மூடியிருந்தது. அத லைட்டா கீறி விட்டுட்டேன். கொஞ்சம் ரத்தம் வந்தது. சட்டுனு அத கையில ஒத்தி ஒரு பேப்பர்ல "I love you" அப்படீன்னு எழுதி முடிச்சாச்சு..


அடுத்து, கண்ணீர். வீட்டுல அம்மா என்னை குனிய வச்சி குமுறும்போதும், பவானி டீச்சர் என் தலையில டிரம்ஸ் வாகிக்கும்போதும் கூட அழாம நெஞ்சுறுதியோட அப்பிடியே நிப்பான் இந்த ஆமிர்கான். இப்படி எதையும் தாங்கும் இதயத்தோட திரிஞ்சிகிட்டு இருந்த நான்... எப்பிடி ஒரு பொண்ணு முன்னாடி அழுவறது? அப்போதான் எனக்குள்ள இருந்த ஐன்ஸ்டின் + பிரேமானந்தா ஒரு ஐடியா பண்ணாங்க. தைலத்தை கொஞ்சம் அதிகமா தலையில தடவுனாலோ, அத கண்ணுக்கு கிட்ட கொண்டு வந்தாலோ தன்னால கண்ணீர் பெருகும். இந்த ஐடியா சூப்பர்னு எனக்குள்ள சொல்லிக்கிட்டு, உடனே போருக்குத் தயாரானேன்.


வீட்டுல இருந்து அமிர்தாஞ்சன் தைலம் & நம்ம லெட்டர் எடுத்துக்கிட்டேன். அசின் பக்கத்து வீட்டுக்கு வந்து என்னை கூப்பிட்டா, கேரம் விளையாட.
நான் மெதுவா அந்த காம்பவுண்ட் கதவ திறந்து உள்ள போனேன். அங்க, அந்த வீட்டு ஆன்ட்டி இருந்ததால, பேசாம உக்காந்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அசின் "நீ உம்மணாமூஞ்சி மாதிரி இருக்க... நான் வீட்டுக்கு போறேன் போடா" அப்படீன்னு சொல்லிட்டு கிளம்புனா.. எனக்கு மனசெல்லாம் படபடன்னு இருக்கு... என்ன பண்றதுண்ணு தெரியல.. அவ உண்மையிலேயே கிளம்புறா. உள்ளுக்குள்ள பதறுது.. இவ்ளோ நேரம் இருந்த தைரியம் இப்போ கால் வழியா நழுவி தரையில ஓடிடுச்சி.... அவ வீட்டு வாசலை நெருங்கியதும்.. இதுக்கு மேல தாமதிக்கக் கூடாதுண்ணு உடனே அவ பின்னாடி ஓடிப் போய் "அசின், ஒரு நிமிஷம் இங்கயே இரு. போய்டாத"னு சொல்லிடு, அவசர அவசரமா காம்பவுண்டு கேட் கிட்ட ஓடிப்போய் பரபரப்பா அமிர்தாஞ்சன் டப்பாவைத் திறந்தேன்.


அவ, "எங்கடா போய்ட்ட, போ... நான் போறேன்"னு சொல்லிட்டு அங்கிருந்து நகர.... நான் என்ன பண்றதுன்னு தெரியாம தைலத்தை எடுத்து ரெண்டு கண்ணுலயும் தடவிட்டேன். பாக்கெட்டுலருந்து லெட்டர எடுத்துக்கிட்டு நான் திரும்பவும், அவ என் முன்னாடி வந்து நிக்கவும் சரியா இருந்தது...
அவ கிட்ட பதட்டத்தோட "அசின், உன்ன..இந்த... இத... நீ... நான்...ரத்தத்துல லெட்டர்... என் கண்ணீரைப் பார்...இதயம்...அய்யோ அம்ம்ம்ம்மா கண்ணு....ஆஆஆஆஆஆஆ...கண்ண்ண்ண்ண்ணூஊஊஊஊஊஊஊஉ அச்சினூஊ........."


"எரும மாடு, எனக்குன்னு வந்து பொறந்து தொலச்சிருக்கு....தல வலிச்சா தைலத்த கண்ணுலயா தேய்ப்பாங்க...? இந்த சனியனால 300 ரூபா கண் டாக்டருக்கு அழ வேண்டியதாப் போச்சி...பரீட்சை நேரத்துல கண்ணு வீங்கி எங்க உசிர எடுக்குறான்....இப்போ எக்ஸாம் எழுத முடியுமான்னு தெரியலயே..."



பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

Sunday, February 1, 2009

தீப்பிடிக்கும் மனசு...ஷாக் அடிக்கும் வயசு!

இது கதையல்ல...நிஜம்!

சம்பவம் நடந்தப்போ ஹாலிவுட் நடிகர் லியார்னாடோ டி-காப்ரியோவுக்கு வயசு 7.. எனக்கும் அப்போ 7 வயசு தான். (நடந்த சம்பவத்துக்கும் அந்த நடிகருக்கும் எந்த தொடர்பும் இல்ல). பசிபிக் பெருங்கடல்ல்ல புயல் சின்னம் உருவாகியிருக்கறதா, லண்டன் பிபிசி ரேடியோவுல செய்தி ஒளிபரப்புன அதே நேரம், எங்க தெருவுல நான் 10 சின்ன பசங்களோட ஐஸ் பாய்ஸ் விளையாடிகிட்டிருந்தேன் (இந்த விளையாட்டுக்கு ஏன் இப்படி பேரு வச்சாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன்).

எங்க தெருவுல எல்லா வீடுகளும் பழைய காலத்து டைப்.. அதனால ஒளிஞ்சிகிறதுக்கு நெறைய இடம் இருக்கும். கோழி பீ (இது ஒரு பையனுக்கு நாங்க வச்ச பேரு. அவன் உண்மையான பேரு மறந்து போச்சி) கண்ண மூடி 100 எண்ணுனான். நாங்க எல்லாரும், ஆளுக்கொரு திசையில போய் ஒளிஞ்சிக்கிட்டோம். எனக்கு ஒளிஞ்சிக்க கிடைச்ச இடம், மனிதனுக்கு சகிப்புத்தன்மையை கத்துக்குடுக்குற இடம்... அதாவது பாழடைஞ்ச கக்கூஸ். அங்க போய் நின்னுக்கிட்டேன்.

எல்லாரையும் அவன் கண்டுபுடிச்சிக்கிடே வந்துக்கிட்டிருக்கான். ஆனா என்னை மட்டும் கண்டுபிடிக்க முடியல. அந்த இடத்துல 5 நிமிஷத்துக்கு மேல் நின்னதால போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி....சுத்தி, முத்தி பார்த்தேன். தடிசா நூல் மாதிரி ஒரு ஒயர் அறுந்து தொங்கிக்கிட்டிருந்துச்சி... நாம தான் தாமஸ் ஆல்வா எடிசனோட கொளுந்தியா பேரனாச்சே... உடனே ஆராய்ச்சி பண்ணலாம்ணு அந்த ஒயரைத் தொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..... ஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வூஊஊஊஊஊஊஊ...ஒரு 10 வினாடிகளுக்கு பாலே டான்ஸ் ஆடி முடிச்சி கீழ விழுந்துட்டேன். உடனே தெரு மொத்தமும் அங்க கூடிடுச்சி..

சில இளவட்ட பசங்க கதவ உடச்சி அரை மயக்கத்துல இருந்த என்னை தூக்குனாங்க. அப்போ, கோழி பீ அங்க ஆஜராகி, என்னை தொட்டுட்டு சொன்னான்.........
"டேய் நீ அவுட்"

பிடிச்சிருந்தா, ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க சாமி!