அனைத்து டிவி சேனல்களும் நேற்று முண்டியடித்துக் கொண்டு ஒளிபரப்பிய உயர்நீதி மன்ற கலவரம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் பலர் அறியாத செய்தி...இந்த மோதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீதான காவல் துறையினரின் கொலைவெறித் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன், உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான ஒரு மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நடத்தினார்.
வக்கீல்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதால், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட தமிழகத்தின் முக்கிய நீதிமன்றங்களில் வழக்குகள் அப்படியே தேங்கி நிற்பதாகவும். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து வெறும் 7 நாட்கள் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் இயங்கியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சற்று உஷ்ணமாகி, நீதிமன்றம் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக செயல்படாமல் விடுமுறை அளிக்கப்படுவதை கடுமையாக கண்டித்தார். இனிமேல் எக்காரணம் கொண்டும் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுவது தடைபடக்கூடாது என ஆதங்கப்பட்ட அவர், நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸார் குவிக்கப்படுவதையும் கண்டித்தார். இவற்றுக்கு விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனால் அந்த உத்தரவு உயர் நீதிமன்றத்துக்கு வந்து சேருமுன்னே, அவர் ஆதங்கப்பட்ட அத்தனை விஷ(ம)யங்களும் அறங்கேறியுள்ளன. நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதமேந்திய காவல் துறையினர் குவிப்பு..வக்கீல்கள், நீதிபதிக்கு அடி, உதை! இவற்றுக்கெல்லாம் மேலாக, உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை!!
கலவர இடத்தில் உண்மையில் நடந்தது என்ன? அடுத்த பதிவில்!
படம் நன்றி: தினத்தந்தி
பிடித்திருந்தால் ஒரு ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்!
Friday, February 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment