Sunday, July 26, 2009

ஆந்தைக்காக அலையும் சேட்டுகள்..சுடுகாடாய் மாறும் வண்டலூர்


மூட நம்பிக்கை = ஒருவர்/ஒரு குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, சில உயிர்கள் தங்கள் நிம்மதியை இழத்தல்.

வசதி குறைந்தோரின் மூட நம்பிக்கைகள் எலுமிச்சை, கோழி, அதிகபட்சம் ஆடு என்பதோடு முடிந்து விடுகிறது. வசதி படைத்தோரின் மூட நம்பிக்கைகள், எந்த எல்லைக்கும் செல்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், வட மாநிலத்தவர்கள். குறிப்பாக சேட்டுகள் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினர் (மொத்தமாக வட மாநிலத்தவர்களை நாம் ஏன் சேட்டுகள் என்று அழைக்கிறோம்?)
சமீபகாலமாக மிகப் பெரிய மூட நம்பிக்கை ஒன்று சென்னையில் வசிக்கும் வட மாநிலத்து பணக்காரர்களை வாட்டி எடுக்கிறது.தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் பன்மடங்கு பெருக வேண்டுமெனில், ஆந்தைகளின் உடலில் இருந்து முடியைப் பிடுங்கி (இறக்கையில் இருந்து பிடுங்கக் கூடாது. உடலில் இருந்து மட்டுமே பிடுங்கப்பட வேண்டும்), அதை வைத்து பூஜிக்க வேண்டும். ஏழு தலைமுறைக்கும் குறையாத சொத்துக்கள் கிடைக்க வேண்டுமெனில், ஆண் ஆந்தையின் கழுத்தைத் திருகி பூஜைகள் செய்ய வேண்டும்.
ஆடு, கோழிகள் என்றால் எளிதில் கிடைத்து விடும்.. ஆந்தைகள்? ஏற்கனேவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஆந்தைகளுக்கு எங்கே போவது, வனவிலங்கு காப்பங்களைத் தவிர...! பல மாநிலங்களிலும் வன விலங்கு சரணாலயங்களில் ஆந்தைகள் இந்த பூஜைக்காக ‘மோட்சம்’ அடைகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆந்தைகள் தங்கள் உயிரை இவர்களுக்காக தியாகம் செய்துள்ளன. எப்படி? ‘மேற்படி’ வருவாய்க்கு எந்த உத்திரவாதமும் இல்லாத அரசு ஊழியர்களைக் கொண்ட வண்டலூர் மிருகக் காட்சி சாலையில், ஆந்தைகள் புண்ணியத்தில் நல்ல வருவாய். ஒரு முடியைப் பிடுங்கித் தர 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர்.
இப்படியே ‘பிடுங்கிப் பிடுங்கி’ அங்கிருந்த மிகப் பெரிய அரிய வகை ஆந்தை தொடர்ந்து சாப்பிடாமல் செத்தே போனது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் ஆந்தைகள் உள்ளன. அவை நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், இருட்டில் வாழும் உயிரினங்கள் என்ற பெயரில் வெளிச்சம் இல்லாத அறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆந்தைகளின் அழிவு, வெளிச்சத்துக்கு வராமலேயே இருட்டுக்குள் மறைந்து விட்டது.

டெய்ல்பீஸ்: இந்த உண்மையை என்னிடம் ஒப்புக்கொண்டது, வண்டலூர் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு பணியாளர். அவர் என்னிடம் பேசியது:ஆந்தைங்கள வந்து சேட்டுங்கோ அடிக்கடி பாப்பாங்க சார்...முடி கேப்பாங்கோ, தர முடியாதுன்னு சொல்லி வெர்ட்டிடுவேன். ஆனா என்னால தொடர்ந்து அத்தையெல்லாம் காப்பாத்த முடில. பாவம் சார் ஆந்த. அத்த போட்டு கொடுமபட்த்தி கட்சில சாகட்சிடானுங்கோ. அது ஒரு வாயில்லா பிராணி சார். சே. இன்னா மன்சனுங்க சார்..அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு கிளம்பும்போது, ‘ சொத்து வச்சிகிறீங்களா சார்.. அது 100 மடங்கு பெர்சா ஆவணுமா சார்... என்கிட்ட கட்சியா ஒரு ஆந்த முடி இர்க்கு சார். சேட்டு பசங்களுக்கு 5 ஆயிரம். நீ நம்மாளு. 2 குடு சார் போதும். இன்னா சார் சொல்ற...?
இன்னாத்த சொல்றது???

Friday, June 5, 2009

அவன்..அவள்...'அது'

சென்னை புரசைவாக்கம். பகலில் இருந்த ஆர்ப்பாட்டங்கள், சலசலப்புகளின் சுவடுகள் ஏதுமின்றி அமைதியாய்..மணி: இரவு 10.30. டென்னிஸ் மேட்ச் பார்வையாளன் போல அங்குமிங்கும் கழுத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர். எந்தப் பக்கம் பார்த்தாலும் திருவல்லிக்கேணிக்கு பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஊரில் விவசாயம் பொய்த்துப் போனதால் நண்பனின் சிபாரிசோடு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பெரிய ஜவுளிக் கடையில் விற்பனையாளன் வேலை. ஒரு வாரம் தானாகிறது சென்னை வந்து. அழகழகான பெண்கள், மெரினா பீச், மவுன்ட் ரோடு என கனவுகளோடு வந்திறங்கியவனுக்கு, கடை தான் பகல் நேர உலகம் என விதிக்கப்பட்டு விட்டது.

மணி: 10.45.
"பரதேசிப் பய சரவணன் பஸ்ஸு நெறய இருக்குன்னு சொன்னானே...ஒரு ஈ காக்காயக் கூட காணோமே... அய்யய்யோ, ஒரு வார பேட்டா காசு ஐநூற புடுங்கிட்டு போய்ருவாய்ங்களா?" சுதாகரின் மெல்லிய புலம்பலை சில நொடிகள் கவனித்து விட்டு, தனது வேலையைத் தொடர்ந்தார் அருகிலிருக்கும் டீ கடையின் ஓனர்.
மணி: 11.00.
பஸ் வரும் என்ற நம்பிக்கை சுதாகரின் கால் வழியே வழிந்து ஓடி சாலையில் மறைந்தது. "இன்னைக்கு ரோட்டுல தான் படுக்கணுமா...ட்ரிப்ளிகேணிக்கு நடந்து கூட போக முடியாதே..." சுதாகர் புலம்பிக் கொண்டிருக்கும் போது தான், அவள் அங்கு வந்து சேர்ந்தாள். சுதாகரின் கண்களுக்கு சுமாராகத் தெரிந்த அவள், சாலையையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கத் தொடங்கினாள்.

மணி:11.10
சென்னையில் இரவு நேரங்களில் பெண்கள் வலை விரித்து காசு பிடிங்கி விடுவார்கள் என நண்பர்கள் அடித்த எச்சரிக்கை மணி, சுதாகரின் மண்டைக்குள் "ணங்" என ஓசை எழுப்பிய அதே நேரம், 24 ஆண்டுகள் அவனுக்குள் ஓயாமல் இயங்கி வரும் செரிமாண மண்டலத்துக்குள் திடீரென பட்டாம்பூச்சிகள் கூடி கும்மியடிக்கத் தொடங்கின."ஐநூறு ரூவா இருக்கே.. கொஞ்சம் செலவு செஞ்சாத்தான் என்ன....அதிகமா கேட்டாங்கன்னா? பேசித்தான் பாப்போமே...அடேய், ஊரு பேரு தெரியாத எடத்துல எக்கு தப்பா போய் மாட்டிக்க போறடா...." சுதாகருக்குள் சட்டசபை விவாதம் நடந்து கொண்டிருந்தது. இவர்கள் இருவரையும் கவனித்த நாயர், அந்தப் பெண்ணைப் பார்த்து லேசாக புன்னகையைச் சிந்தி, "பார்ட்டி நம்பகமானவன் தான், இங்க தான் எப்பவும் பஸ் ஏறுவான்" என பார்வையால் கிரீன் சிக்னல் கொடுத்தார்.

மணி:11.15
இதற்கு மேல் பஸ் வராது என உறுதி செய்து கொண்ட சுதாகர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முதல் தடவையா இருந்தா என்ன....போய் கேட்டுத்தான் பாப்போமே. ரேட் படிஞ்சா போகலாம்" என ஒரு வழியாக முடிவெடுத்துத் திரும்பும் போது....சற்று தள்ளி நின்றிருந்த பெண் இப்போது நெருக்கமாய்!
சுதாகர் திக்கித் திணறிக் கேட்பதற்குள்..."நைட்ல இப்போ தான் மொதோ மொதலா தொழிலுக்கு வந்துருக்கேன். அதான் நல்ல பார்ட்டியான்னு நின்னு பார்த்தேன்.. வீடு எங்கே?" அவளே பேச்சைத் தொடங்கினாள்.
"நா..நான் ட்ரிப்ளிகேணி""ஓ..போலாமா?"
"எவ்..எவ்வளவு? என் கிட்ட கம்மியாத் தான் இருக்கு"
"பரவால்ல வாங்க சார், அதிகமா கேக்க மாட்டேன். பெரிய கஸ்டமர் கிட்ட ரேட் அதிகமா வாங்கிக்குவேன்"
"சரி போலாம்.."
பக்கவாட்டில் மாட்டியிருந்த தனது யூனிபார்ம் சட்டையை மாட்டிக் கொண்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாள் அவள். சென்னையில் முதல் முறையாக ஆட்டோவில், அதுவும் பெண் ஓட்டும் ஆட்டோவில் பயணிக்கும் பரவசத்துடன் அவன்!
இருவரையும் சுமந்து கொண்டு சீறிப் பாய்ந்தது அது!!


கதை பிடித்திருந்தால் தமிழிஷ், தமிழ்மணத்தில் ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்

Saturday, May 9, 2009

ஓசியில் ஏசி காத்து வேணுமா?

கத்திரிவெயில் பல் இளிக்கத் தொடங்கி விட்டது. ஆபிஸில் 8 மணி நேரம் ஏசியில் (பல ஆபிஸ்களில் ரெசிஷன் காரணமாக ஏசி பெட்டிகள் வெறும் தூசிப் பெட்டிகளே...) நேரத்தைப் போக்கினாலும் சனி,ஞாயிறுகளில் என்ன செய்வீர்கள்? வீட்டில் ஏசி வைத்து குதூகலிக்கும் அளவுக்கு பட்ஜெட்டில் இடமில்லாதவர்கள் அனைவரும், இனி ஓசியில் ஏசியை அனுபவிக்க சூப்பர் டிப்ஸ் (இந்தப் பதிவுக்காக களப்பணி ஆற்றி கருவாடானது தான் மிச்சம் ):

1. வெயில் ஆரம்பிக்கும் நேரம் வண்டியை கிளப்புங்கள் அல்லது பஸ்/ரயிலைப் பிடித்து நேராக சரவணா நகர் (தி நகர் தான்!) வந்து சேருங்கள். பனகல் பார்க்கில் எங்காவது ஓரமாக வண்டியை நிறுத்தி விடுங்கள். அங்கிருந்து உங்கள் ஏசி பயணம் துவங்கட்டும். பனகல் பார்க்கிலிருந்து நேராக புதிய சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் செல்லுங்கள். வாசல் வரை சென்று அப்படியே ஹால்ட் அடித்து மேற்கு திசை பார்த்து நின்று விடுங்கள். கையில் கடலை/வறுத்த பொறி என ஏதாவது ஒன்று. காரணம்: மனைவி சகிதம் குடும்பத்தை ஜவுளி எடுக்க கடைக்குள் அனுப்பும் செவ்வாய் புண் சிரிப்புக்காரர்கள் (இளிச்சவாயர்கள்) இப்படித்தான் நிற்பர்.

சரியாக 11 மணியளவில் கடையின் ஏசி பொட்டிகள் அனைத்தும் வேகப்படுத்தப்படும். கடையின் வாசல் மூடப்படாததால் ஏசி காற்று அப்படியே வாசலைத் தாண்டி சாலையில் வழியும். வாசலில் ஏர் கட்டர் எனும் காமெடி பீஸை பொருத்தியிருப்பார்கள். அசுர ஏசி காற்றை அது தடுத்து நிறுத்த முயன்று தோற்றுப் போன பின் வாசலைத் தாண்டி சாலையில் நின்றிருக்கும் உங்கள் மீது ஏசி காற்று வருடிக் கொடுக்க ஆரம்பிக்கும் தருணம் இருக்கிறதே... அதை அனுபவிக்க வேண்டும் மக்கா!


ஒரே இடத்தில் நின்றிருந்தால் சந்தேகம் வந்துவிடும் கடை செக்யூரிட்டிக்கு. அதனால்... உங்களை வெளியில் காக்க வைத்து விட்டு உள்ளே குடும்பம் கும்மி அடிப்பது போலவும், நீங்கள் டென்ஷனின் உச்சியில் நின்று டான்ஸ் ஆடுவது போலவும் படம் காட்ட வேண்டும். 1 மணி நேரம் இப்படியே கட்டையைக் கொடுத்து விட்டு போத்தீஸ், சென்னை சில்க்ஸ், நல்லி என ஜகா வாங்கிக் கொண்டே தி நகர் பஸ் ஸ்டாண்ட் வரை நகரலாம்.

2. ரோட்டில் நின்று ஏசி காத்து வாங்குவது பிடிக்கவில்லை என்றால், நேராக சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே என்ட்ரி கொடுங்கள். ஏழு மாடி (சரி தானே?) ஏறி இறங்கி, ஒவ்வொரு தளத்திலும் துணி வகையறாக்களை முகர்ந்து, கை துடைத்து, பிடித்து இழுத்து கிழித்து... என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடை வேலையாட்கள் 100 பேர் இருந்தாலும், ’என்ன சார் வேணும்’னு ஒருத்தரும் வரமாட்டாங்க....சொந்த ஊர்க் கதைகளில் அவர்கள் பிஸி! பொருள் எதுவும் வாங்கவில்லை என்றாலும் கேட்க யாருமில்லை.
ஆனால் தெரியாத்தனமாக சண்முகா ஸ்டோர்ஸ், சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளே ஏசி காத்து வாங்கப் போய் விடாதீர்கள்...வாக்குப் பதிவு முடிந்த ஓட்டுச் சாவடி போல இருக்கும். ஓணர், மேனேஜர், வேலையாட்கள் தவிர கஸ்டமர் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். நீங்கள் நடந்து உள்ளே செல்லும் போது, பேஷன் ஷோவில் அன்ன நடை போடும் அழகிகளைப் பார்ப்பது போல அனைத்து சிப்பந்திகளும் கண்களால் சிலந்தி வலை பின்னுவர்..

2. ஓசி ஏசிக்கான அடுத்த ஸ்பாட் கொஞ்சம் ஹை-டெக்கானது. அது தான் ஸ்பென்சர்ஸ் பிளாசா. வண்டியில் செல்பவர்களை பார்க்கிங் நெருக்கடியால் கொஞ்சம் எரிச்சலடையச் செய்யும். பஸ்ஸில் போவோர்க்கு அது சொர்க்கம். உள்ளே நுழைந்தால் உங்களை கேட்க யாருமில்லை. பாட்ஷா மாதிரி எஸ்கலேட்டரில் ஸ்டாலாக ஏறலாம், லிப்டில் இறங்கலாம், மியூசிக் வேர்ல்டு கடைக்குச் சென்று ஹெட்செட்டில் இதமான பாடல்களைக் கேட்கலாம். கையில் 5 ரூபாய் இருந்தால் முதல் தளத்தில் உள்ள டீசன்டான டீ கடையில் (டீ கடை இருக்கு) சூடாக ஒரு டீ குடித்து விட்டு தெம்பாக சுற்றலாம். நேரம் போவது தெரியாது.

3. அடுத்த ஹைடெக் இடம், சிட்டி சென்டர் (ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்). வண்டி வைத்திருந்தால் சாரி! ஒரு மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய். அதற்கு மேலே போனால் கட்டணம் எகிறும். தியாகராஜா, சைதை ராஜ், கோபிகிருஷ்ணா தியேட்டர்களில் பால்கனி டிக்கெட் கட்டணம் தான், ஐநாக்ஸில் பார்க்கிங் கட்டணம்... அதனால் கொஞ்சம் உஷார். உள்ளே தவிச்ச வாய்க்கு ஒரு வாய் தண்ணி தர மாட்டாய்ங்க..பாத்துக்கங்க!
அடுத்த பதிவில் வியர்வை நாற்றம் வெளியில் தெரியாமல் இருக்க உயர் தர சென்ட், பர்ஃபியூம், பாடி ஸ்பிரேக்களை ஓசியில் அடித்துக்கொண்டு திரிவது பற்றி காணலாம் (ஓட்டுக்களை அள்ளிக்கொடுத்து ஆதரித்தால்...).






பிடித்திருந்தால் தமிழிஷ், தமிழ் மணத்தில் ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்

Wednesday, April 1, 2009

மீண்டும் அதே குறுகுறுப்பு, குதூகலம், ஆனந்த அதிர்ச்சி!

சிறு வயதில் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்? விளையாட்டு, குறும்பு, அழுகை, வெடிச் சிரிப்பு, டிவியில் ஒளியும் ஒலியும், கண்மணிப் பூங்கா நிகழ்ச்சிகள், அம்புலிமாமா புத்தகம்... இவற்றுள் நான் அதிகம் சிரித்தது, அதிகம் பயந்தது, அதிகம் சிலாகித்தது அம்புலிமாமா புத்தகத்துடன் தான். வண்ணமும் அல்லாமல், கறுப்பு வெள்ளையுமல்லாமல் ஈஸ்ட்மேன் வண்ணத்தினால் ஆன பக்கங்கள்.. மிகவும் பிடித்த விக்ரமாதித்தன், வேதாளம் கதைகள், தெனாலிராமன், பீர்பால், முனிவர்கள், ராட்ஸசர்கள், ஏழை விவசாயி, செல்வந்தன், பேராசைக்காரன் என எத்தனை கதாபாத்திரங்கள்...சிறுவயதில் இவர்களின் கதைகளூடே பயணிக்கும் போது ஏற்படும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை சமீபத்தில் மீண்டும் உணர்ந்தேன்.. அதே அம்புலிமாமாவால்

கால ஓட்டத்துக்கேற்ப அம்புலிமாமாவும் இணையத்துக்குள் வந்து விட்டது. கதைகளை ஹை-டெக் வடிவில் கொடுத்து ஜெடிக்ஸ் டிவி போல ஆக்கிவிட்டிருப்பார்கள் என்றெண்ணி அந்தத் தளத்திற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அறிவியல், பொது அறிவு, செய்திகள் என பல புதிய பகுதிகளை வைத்திருந்தாலும், பழைய... அதாவது 1947ம் ஆண்டிலிருந்து வெளியான அம்புலிமாமா கதைகளை அப்படியே, அதே படங்களுடன் தெளிவாக ஸ்கேன் செய்து அளித்திருக்கிறார்கள்.

விக்ரமாதித்தன், பீர்பால், தெனாலிராமன் கதைகளும் அப்படியே, அதே வடிவில்,அதே படங்களுடன்!நான் ரசித்தேன்.. நீங்களும் அம்புலிமாமாவின் குட்டி வயது வாசகர் எனில், மாயாஜாலக் கதை பிரியர் எனில்... http://tamil.chandamama.com/




பிடித்திருந்தால்...பயனுள்ள தகவல் எனில்... ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்!

Tuesday, February 24, 2009

ஏ.ஆர். ரஹ்மான் தமிழர் இல்லையாம்; பாலிவுட்காரர்கள் கொக்கரிப்பு!!

Bollywood music director AR Rahman bags 2 Oscars"
- சி.என்.என், 9 எக்ஸ் மற்றும் பிற ஹிந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்.

"The renowned Bollywood Composor AR Rahman wins Oscar"
- ஹிந்தி மற்றும் ஆங்கில பத்திரிகைகள்.
"ஏ.ஆர். ரஹ்மான் சாதித்து விட்டார். இது நம் இந்தியாவுக்கும், பாலிவுட் உலகுக்கும் பெருமை." - சாருக்கான், சல்மான் கான் மற்றும் இதர கான்கள்.

"அவர் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஸ்டைல் அருமையாக இருக்கும். அவர் நம் சொத்து"
-அமிதாப் மற்றும் சில ஹிந்தி இயக்குநர்கள்.

எனக்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுண்டு. அதற்காக அம்மா தாலியைக் கழட்டி காதலிக்கு போட்டு அழகு பார்ப்பது போல, அவரை பாலிவுட் இசையமைப்பாளர் தான் என ஆமோதித்துக்கொண்டு கைதட்டும் பக்குவம் எனக்கில்லை. ரஹ்மான் தமிழன். தமிழகத்துக்கு சொந்தமானவர்.

"மதராஸி வாலா, ஓஹ் ச்சோர் சாலா" (மதராஸிகள் திருட்டு......) என இதுநாள்வரை நம்மை ஏளனம் செய்துவந்த மும்பை, டெல்லியர்கள் இப்போது ரஹ்மானை மட்டும் தூக்கி வைத்து சொந்தம் கொண்டாடக் காரணம்? இந்தியாவுக்கு கிடைத்த ஆஸ்கர், பாலிவுட்டுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். உலகம் பாலிவுட்டை போற்ற வேண்டும். இதை வைத்து ரஹ்மானை மிகப் பெரிய தொகைக்கு 'குத்தகை' எடுத்து (தங்கள் படங்களுக்கு), அதன் மூலம் உலகளவில் வியாபாரம் பண்ணலாம் என்ற வியாபார தந்திரம் தான்..

இதன் ஒரு பகுதியாக, ரஹ்மானுக்கு சஹாரா சிட்டியில் மிகப் பெரிய அரண்மனை வடிவிலான வீட்டை பரிசாகக் கொடுத்து, அங்கேயே மடக்கிப் போடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்கச் செய்தவர் இந்த 'இழுப்புக்கு' ஒத்துவரமாட்டார் என்றாலும்....அவர் நம் சொத்து. நம் சொந்தம். பசித்து சாப்பிடும் இலையில் முன்பின் அறியாதவன் கைவைத்தால் சும்மா விடுவோமா? உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே "ரஹ்மான் நார்த் இண்டியன் ஹை" எனக் கூற முயற்சிப்போரை என்ன செய்யப் போகிறோம்?





என் கருத்தை ஏற்றுக் கொண்டால் தமிலிஷ் மீது ஒரு ஓட்டு போட்டு விடுங்கள்!

Friday, February 20, 2009

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகத்தில் கரி!

அனைத்து டிவி சேனல்களும் நேற்று முண்டியடித்துக் கொண்டு ஒளிபரப்பிய உயர்நீதி மன்ற கலவரம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் பலர் அறியாத செய்தி...இந்த மோதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீதான காவல் துறையினரின் கொலைவெறித் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன், உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான ஒரு மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நடத்தினார்.
வக்கீல்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதால், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட தமிழகத்தின் முக்கிய நீதிமன்றங்களில் வழக்குகள் அப்படியே தேங்கி நிற்பதாகவும். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து வெறும் 7 நாட்கள் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் இயங்கியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சற்று உஷ்ணமாகி, நீதிமன்றம் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக செயல்படாமல் விடுமுறை அளிக்கப்படுவதை கடுமையாக கண்டித்தார். இனிமேல் எக்காரணம் கொண்டும் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுவது தடைபடக்கூடாது என ஆதங்கப்பட்ட அவர், நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸார் குவிக்கப்படுவதையும் கண்டித்தார். இவற்றுக்கு விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆனால் அந்த உத்தரவு உயர் நீதிமன்றத்துக்கு வந்து சேருமுன்னே, அவர் ஆதங்கப்பட்ட அத்தனை விஷ(ம)யங்களும் அறங்கேறியுள்ளன. நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதமேந்திய காவல் துறையினர் குவிப்பு..வக்கீல்கள், நீதிபதிக்கு அடி, உதை! இவற்றுக்கெல்லாம் மேலாக, உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை!!
கலவர இடத்தில் உண்மையில் நடந்தது என்ன? அடுத்த பதிவில்!
படம் நன்றி: தினத்தந்தி



பிடித்திருந்தால் ஒரு ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்!

Monday, February 2, 2009

ஹலோ மைடியர் ராங் நம்பர்...!!

தலைப்பை பாத்துட்டு ஏதோ, ரொமாண்டிக்கான கதை போல இருக்கும்ணு நெனச்சி அதே மூடுல படிச்சீங்கன்னா.. ஐ அம் சாரி! ஆர்வக் கோளாறால நான் ஆப்பு வாங்குன கதையைத் தான இப்போ பார்க்கப்போறீங்க.

10 வருஷங்களுக்கு முன்னாடி எனக்கே எனக்கான செல்போனை (செங்கல் வகையறா) அதிக விலை கொடுத்து வாங்குன நேரம் அது. கையில் செல்போன் இருந்ததால கண்ணு மண்ணு தெரியாம கடலை போட்டு, முழி பிதுங்கி பில்லு கட்டிக்கிட்டிருந்தேன் (ஒரு கட்டத்துல செல்போன வித்து பில்ல செட்டில பண்ணிருக்கேன்னா பாத்துக்கங்களேன்). ஆனாலும் கெத்து மெயின்டெய்ன் பண்ணணுமே....அதுக்காக மிஸ்டு கால் வந்தாக் கூட உடனே அவுட்கோயிங் கால்களை சகட்டு மேனிக்கு அடிச்சித் தள்ளி திரிஞ்ச காலம் அது.

ஒருநாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வண்டில போகும்போது, போன் ரிங் அடிக்குது. வண்டிய யாருக்கும் பாதகமில்லாம ஓரங்கட்டி (வண்டி கண்டிஷன் அப்பிடி) போன் எடுத்துப் பாக்குறதுக்குள்ள.....கால் கட்டாயிடுச்சி. வித்தியாசமா, நீளமா, புதுசா இருந்த நம்பரப் பாத்து கொஞ்சம் டர்ரியலானேன். ஒரு வேளை வேலைக்கு அப்ளை பண்ணுன கம்பெனியோட ஹெட் ஆபீஸ்ல இருந்து கால் பண்றாய்ங்களா? அய்யயோ அதிர்ஷ்டலட்சுமி ரிங்டோன் வழியா காட்டு கத்து கத்துனதுக்கு அப்புறமும் நாம எடுக்கலயா? இத விடக் கூடாதுன்னு உடனே போன எடுத்து அந்த நம்பருக்கு கால் அடிச்சேன்.

"ஹெல்லோ... ஐ காட் மிஸ்ட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்... ஆங்...வெல், மே ஐ நோ வூ இஸ் திஸ்..?"
எதிர்முனையில்: "அல்லோஓஓ.. யாரே.. ஒண்ணீயுமே புர்லியே. ஆரு வோணும்? ஒரு பெரிசு பேசியது.
நான் லைட்டா ஜர்க் ஆனேன். "ஆங்... எனக்கு இப்போ இந்த நம்பர்லருந்து கால் வந்தது. இது எந்த ஏரியா...யாரு கால் பண்ணுனது?"
"இது திர்ணாமல (திருவண்ணாமலை) சார்... ரங்கன் தான் இங்க இருந்தான். இர்ங்கோ அவுன கூப்புர்றேன்"
யாரது ரங்கன்? சரி கால் பண்ணியாச்சி... காத்திருந்து பேசித்தான் பாப்போமே...
சரியா 12 நிமிடங்கள் கழித்து, தகர டப்பாவுல ஆணியை வச்சி தேச்ச மாதிரி ஒரு குரல்
"ஆரு நீங்கோ...என்னா வோணும்?"
"நான் சென்னையில் இருந்து பேசறேன்..என்னோட நம்பர் 9840013929. எனக்கு கால் பண்ணீங்களா?
"ஒரு நிமிஷம் இருங்க சார்.."
10 நிமிடங்கள் கழித்து, " சார் தெர்ல சார், யாரோ ஒருத்தரு வந்தாரு.. போன் பண்ணிட்டு கெடைக்ககலைன்னு போய்ட்டாரு..."
"ஹ்ம்ம்.. இது என்ன இடம்?
"இது எஸ்டிடி பூத்து சார்"
"ஓக்கே....நான் வைக்கிறேன்"
"சார் சார்...ஒரு நிமிஷம் இருங்க. போன் பண்ணுன ஆளு வந்துட்டாரு, பேச சொல்றேன்...
"5 நிமிட மவுனம். "ஹேல்லோ"
"ஆங்... ஹல்லொ. நான் சென்னையில் இருந்து பேசுறேன். என்னோட நம்பர் 9840013929. எனக்கு நீங்க கால் பண்ணீங்களா?"
"ஓ.. சாரி சார், நான் தான் பண்ணுனேன். ஆனா நம்பர் தப்பா அழுத்தி உங்களுக்கு போய்டுச்சா... சாரி, ராங் நம்பர்!"

சரியாக 22 நிமிடங்களுக்குப் பின் அந்த காலை துண்டித்த ,பின் செல்போனை ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு வண்டி கண்ணாடியில் முகத்தை பார்த்தேன்....!!!



பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!