Friday, January 30, 2009

ஒரிஜினலை விட பைரஸி சாஃப்ட்வேர் நல்லது! ஏன்?

'எதுக்கு சார் பத்தாயிரம் 20 ஆயிரம்னு காச கரியாக்குறீங்க...என்ன வேணும்னு சொல்லுங்க, அதையே 100 ரூபாய்க்கு தர்றோம். ஒரிஜனல விட சூப்பரா இருக்கும். 2 க்கு மேல வாங்குனீங்கன்னா எக்ஸ்ட்ரா ஓண்ணு ஃப்ரீயா தர்றோம்...ரேட் பாத்து பண்ணிக்கலாம் சார்...' இது வெளிநாட்டு பொருட்களின் போலிகளை வாங்க முற்படுவோரிடம் விற்பனையாளர் பேசும் டயலாக் இல்லை... சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சாஃப்ட்வேர்களின் பைரஸி எனப்படும் போலிகளை விற்பனை செய்யும் விற்பனையாளரின் வியாபாரப் பேச்சு.

வீட்டுக்குள் அல்லது சிறிய அளவில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரில், பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம்களில் 90 சதவீதம் பைரஸி தான். மிகுந்த சிரத்தையுடன் பல மாதங்கள் ஆய்வுசெய்து வடிவமைக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டம்கள் மற்றும் சாஃப்ட்வேர்களைக் காட்டிலும், அவற்றின் பைரஸிகளுக்கு மவுசு அதிகமாக இருப்பது ஏன்? அசல் மென்பொருள்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றின் போலிகளின் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்ன? இதை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையில் அலசாமல், சாதாரண பயனாளர் ஒருவரின் பார்வையிலிருந்து பார்த்தால், பைரஸிகளுக்கான சரியான காரணம் புரிந்து விடும்.


அசல் சாஃப்ட்வேரா? எங்கு விற்கப்படுகிறது... எப்படி வாங்குவது... என்ன விலை...?
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல...ஆடி மாதத்தில் கூட தள்ளுபடி என்ற பெயரில் டி.வி, பிரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமின்றி குண்டூசிகளின் விற்பனையும் களைகட்டும். தங்களது தயாரிப்புகளை இந்தந்த இடங்களில், இந்தந்த விலைகளில் வாங்கலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன நிறுவனங்கள். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, ரேடியோ, கண்காட்சிகள் மற்றும் பெரிய கடைகளில் காட்சிப்பொருளாக்கி தங்கள் தயாரிப்புகளை அவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆனால் , டி.வி, பெட்டிக்கு சமமாக அனைத்து வீடுகளையும், அலுவலகங்களையும் அலங்கரித்துவரும் கம்ப்யூட்டர்களுக்கு முதுகெலும்பாக செயல்படும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கிய சாஃப்ட்வேர் தொகுப்புகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன, அவற்றின் விலை என்னவென்று யாராவது கூற முடியுமா? பைரஸி சாஃப்ட்வேர்கள் வைத்திருப்பது தண்டனைக்குரியது என கூறிக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட் உள்பட பெரிய நிறுவனங்கள்கூட, தங்கள் தயாரிப்புகளைப் பற்றி பொதுமக்களுக்கு புரியவைத்து (மற்ற எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது போல), அசல் மென்பொருள்கள் பற்றிய தெளிவை இதுவரை ஏற்படுத்த, ஏனோ தயக்கம் காட்டுகின்றன.

அட்டகாச தள்ளுபடிகள், அதிரடி சலுகைகள் என கவர்ச்சி விளம்பரங்கள் அளிக்கக் கூட வேண்டாம்... 'தயாரிப்புகள் கிடைக்கும் இடம், அவற்றின் பயன்களை' பொதுமக்களுக்கு புரியும்படி பத்திரிகைகளில் (அவுட்லுக், வீக் போன்ற மேல்தட்டு பத்திரிகைகளில் மட்டும் அளித்தால் போதாது) விளம்பரமாக அளிக்கலாம். ஆனால் அதைச் செய்ய நிறுவனங்களால் முடிவதில்லை. அசல் மென்பொருள்களை அலைந்து திரியாமல் எங்கு வாங்குவது, என்னென்ன பயன்கள் என்பதை விளக்க யாரும் இல்லாததால், பயனாளர்கள் பைரஸியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அடுத்து, அதன் விலை.... அசெம்பிள் செய்யப்படும் கம்ப்யூட்டரின் விலைக்கும், நிறுவன தயாரிப்பு கம்ப்யூட்டர்களுக்கும் அதிக விலை வித்தியாசமில்லை. தற்போதுள்ள சூழலில் தரமான கம்ப்யூட்டர்கள் கூட 20ஆயிரத்து சொச்சத்தில் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு அசல் சாஃப்ட்வேர்களை உள்ளிட வேண்டுமென்றால் கூட, கம்ப்யூட்டர்களின் மொத்த விலைக்கு இணையாக பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமின் விலை சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் பக்கம் செல்வதற்கு, சிறிய நிறுவனங்கள் மற்றும் சாதாரண பயனாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.

இதை சாதகமாக்கிக்கொண்டு, அசெம்பிள் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர்கள் சர்வ சாதாரணமாக பைரஸி சாஃப்ட்வேர்களை நகலெடுத்து சகட்டுமேனிக்கு விற்றுத் தள்ளுகின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், தடுக்க வழிகள் தெரிந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கை.

வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒரு சிலர் பைரஸி சாஃப்ட்வேர் வாங்குவதால், தங்கள் தயாரிப்புக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், அசல் மென்பொருள்கள் வாங்குவதில் உறுதியாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப் பயனாளர்கள் இருக்கும் வரை தங்களுக்கு கவலையில்லை என்றும், நிறுவனங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன.

பைரஸி பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பயனாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் கூட, அசல் மென்பொருள்களின் உரிம சிக்கல்கள் மற்றும் துரிதமற்ற சேவை ஆகியவற்றால் வெறுத்துப் போய் தற்போது இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளிக்கும் ஓப்பன் சோர்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இனியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விற்பனையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால்... அசல் மென்பொருள்கள் என்பது வெறும் மாஸ்டர் காப்பியாக மாறி, பைரஸி சாஃப்ட்வேர்கள் தான் அசலானவை என்ற நிலை உருவாகிவிடும்!
அசல் மென்போருட்கள்/ஆபரேடிங் சிஸ்டம்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் தோன்றுகிறதோ, அப்போது தான் பைரஸி மறையும். அதுவரை...பைரஸி நல்லது!!

பிடிச்சிருந்தா, ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க!!

11 comments:

Anonymous said...

Boss All good things are free ! that why open source software are in use...

India should do away with MS and go for opensource products like china ..

VS Balajee

Bala said...

Thanks thaleeva....
Appuram original os rate than mukkiya karanamnu Nan naneekuraen

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி பாலாஜி, நன்றி பாலா...

ஓஎஸ் விலையைக் காட்டிலும் சில சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகம். குறிப்பாக மல்டிமீடியா சாஃப்ட்வேர்கள்.

ஓப்பன் சோர்ஸ் பற்றிய முழுமையான விழிப்புணர்வை நாம் இன்னும் பெறவில்லையே பாலாஜி...மைக்ரோசாஃப்டுக்கு மாற்று, அதன் பைரஸி மட்டும் தான் என நினைத்துக்கொண்டிருக்கிறோம் இன்றளவும்!!

ராஜ நடராஜன் said...

பைரசி படம் பார்க்கதானுங்க பயமா இருக்குது.ஆனால் சிரிக்குதுங்க:)

அசல் நீங்க சொன்னமாதிரி இருக்கிற இடத்தையும் காணோம்,சிரிக்கிற பாட்டையும் காணோம்.யானை முக்கா துட்டு அங்குசம் மூணணா கணக்குதான் அசலுக்கு.

ISR Selvakumar said...

இந்த டாப்பிக்ல இது வரைக்கும் யாரும் பிளாக் எழுதல. பாராட்டுக்கள்!

தலைப்புதான் மிஸ்-லீடிங்காக இருக்கிறது. இருந்தாலும் பரபரப்புக்காக அப்படிச் செய்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

என்னிடம் இருப்பது 90% ஓப்பன் சோர்ஸ்தான்.

விசித்திரம் என்னவென்றால் ஓப்பன் சோர்ஸ் இலவசம். ஆனால் அதற்கு 'மைக்ரோசாஃப்ட்' வகையறாக்களை விட விளம்பரம் கம்மி. சொல்லப்போனால் பலருக்கு ஓப்பன் சோர்ஸ் என ஒன்றிருப்பதே தெரியாது.

பள்ளி அளவிலேயே ஓப்பன் சோர்ஸ் பற்றி எடுத்துச் சொல்லி, பாடம் சொல்லித் தந்தால் 'ஓப்பன் சோர்ஸ்' பிரபலமாகும் என்பது என் கருத்து.

GNU அன்வர் said...

நண்பா நல்ல ஆராய்ச்சி monopole Microsoft-க்கு இணையா இந்த open source Linux வந்து ஓரு எழைகுழந்தைக்கும் computer கிடைக்கும் காலம் வெகுததூரத்தில் இல்லை நண்பா

புருனோ Bruno said...

தற்சமயம் நான் பரிந்துரைப்பது BOSS - சிடாக் நிறுவன வெளியிடு

கிட்டத்தட்ட விண்டோஸ் போன்றே அமைப்பு. ஒபன் ஆபிஸும் இருக்கிறது.

பிரேம்குமார் அசோகன் said...

கருத்துக்களுக்கு நன்றி திரு. ராஜ நடராஜன், திரு. பிகிலு...
செல்வா சார், நீங்க சொல்றது சரிதான்.. வீட்டிலேயே துளசிச் செடி இருக்க, மருந்துக்கடைக்குச் சென்று காசு கொடுத்து ஜெலுசில் வாங்கிக் கொண்டிருக்கிறோம் நாம்!!
ஓப்பன் சோர்ஸின் பரந்துபட்ட செயல்திறன்களை பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும்.

Anonymous said...

Sir, Atleat neengalachum antha shop address and other details ha solli irukalamaey. Anyway next atha pathiyum oru blog poduvinganu nenaikiren


BY,
- ஒரிஜினல் சாஃப்ட்வேர் கடை தெரியாத அப்பாவி

vetrida puridal said...

பைரசியிலேயே பயின்று அதிலேயே தேர்ச்சி பெற்று பிழைத்து கொண்டிருக்கும் நாம் எப்படி பிரேம் மறக்க முடியும் ? பழச மறக்க கூடாது இல்லையா?

கம்ப்யூட்டர் கற்க செல்கின்றோமே கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு அப்பொழுதே இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.

பாகில்ட்டி களே பைரசி சீடி விக்கறாங்க? யாரவது தடுக்க வேண்டாமா ?

நன்றி

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி அனானி... ஒரிஜினல் எங்க கிடைக்கும்னு சரியாத் தெரியல...சம்ப்யூட்டர் ஷோரூம்களில் (பிராண்டட் கம்ப்யூட்டர்)கிடைக்கும்னு நினைக்கிறேன்.

ஆமா ஸ்ரீனி..பல கம்ப்யூட்டர் சென்டர்களில் அனாயாசமாக மாணவர்களுக்கு பைரஸி சாஃப்ட்வேர்களியேயே வகுப்பு எடுக்குறாங்க. என்னத்த சொல்ல!!!

Post a Comment